எனது மின்னூல்கள்

Friday 30 March 2018

முச்சந்தி முரசு - 15




காவிரிக் கொடை:

காவிரி ஓடினால் கழனியெல்லாம் செழிக்கும்
காவிரி வாடினால் மணற்கொள்ளை கொழிக்கும்
காவிரி ஓடினும் வாடினும் ஊடகம் தழைக்கும்


முச்சந்தி முரசு - 14




ஆண்டி ஆக்கினீரே:

பழம் கேட்டேன் மறுத்தீர்கள்
பாஷாணம் ஏற்றேன் சுரண்டினீர்கள்
பசும்பொன் கொண்டேன் திருடினீர்கள்
பழநி மலைபோதும், விட்டுவைப்பீர்!

எதற்கு , எதற்கு ?

அறிவனுக்கு எதற்கு ஞானப் பழம் ?
ஆண்டிக்கு எதற்கு நவ பாஷாணம் ?
அழகனுக்கு எதற்கு ஐம்பொன் ?
அதனால் எல்லாம் எமக்கே!

முச்சந்தி முரசு - 13



கண்டேன், காவிரி கரைதனிலே:

வீதிதோறும் கோயில் கண்டேன்
கோயில்தோறும் குளம் கண்டேன்
குளம்தோறும் தரையையே கண்டேன்

குடந்தை உலா:

நளனின் குளம் நள்ளாரில் நலியுது
இராகுவின் தீர்த்தம் தீர்ந்தே போனது
உப்பிலியின் குளம் உலர்ந்து உறைகிறது
வாஞ்சியின் குளம் வரண்டு வாழ்கிறது
வருணா வஞ்சனை ஏனோ?

முச்சந்தி முரசு - 12



உலகப் பந்து:

பந்தைச் சிதைத்துப் பலத்தை வீழ்த்துவோம்
பார்ப்பவர் காதில் பூவைச் சுற்றுவோம்
பன்னாட்டு விளையாட்டைப் பரிகாசம் பண்ணுவோம்

முச்சந்தி முரசு - 11



அறிவுலக அடிமைகள்:

பகல் இரவு எனும் பாகுபாடு எதற்கு
பசி தூக்கம் எனும் உணர்வு எதற்கு
பல்லடுக்கு மாளிகையில் பணிபுரிவோமே
பன்னாட்டு முதலைக்கு அடிமைசெய்வோமே!

உறங்குவதற்கு அல்ல இரவுகள்
உண்பதற்கு அல்ல உணவுகள்
ஊதியம் ஒன்றே கனவுகள்
உலகம் இணைக்கும் அடிமைகள்!

Saturday 10 March 2018

முச்சந்தி முரசு - 10


மூவுலக சஞ்சாரி:

பொய்கள் கூடிப் போட்டன மாநாடு

பொழுது புலர்ந்ததும் ஊரெல்லாம் சுற்றிவர

பொருத்தமாய்க் கிடைத்ததே முகநூல் வாகனம்

முச்சந்தி முரசு - 9



காலந்தோறும் கைக்கிளை:

காதல் - ஏற்றால் களிப்பு 
காதல் - மறுத்தால் அழிப்பு
காதல் - காலன் வாகனமோ?



முச்சந்தி முரசு - 8




எமதர்மம்:

காப்பதற்கோர் கவசமில்லையென

காக்கும் காவலனே காலனானான்

கரு காவாது மாண்டாளே தாயுமானானூரில்!



Wednesday 7 March 2018

முச்சந்தி முரசு - 7


                                                                                                                                                                   
இன்பமயம்:

வங்கியில் வேலையெனின் களவாடிக் களிக்கலாம்

வாய்ச்சண்டை வீரமெனின் ஊடகத்தில் உலவலாம்

வாக்கு வாங்கி வென்றிடின் சிலையைத்தான் உடைக்கலாமே!

Monday 5 March 2018

முச்சந்தி முரசு - 6

பொன்னியின் செல்வர்கள்:

பயிர் பிழைக்க கையேந்துவது உழவர்

வயிறு பிழைக்க வசைபாடுவது அரசியலார்

கயிறு திரிக்க களம் அமைப்பதோ ஊடகத்தார்