எனது மின்னூல்கள்

Thursday, 29 September 2011

சொற்றிறம்


பேசவும்,   பேசாதிருக்கவும்  பழகுவோம்      

உயிரினங்களிலேயே  மனிதரை  வேறுபடுத்திச் சிறப்பிப்பது  பேசும் திறனே. விழுமிய செல்வமாகிய சொற்றிறனின் அருமையுணர்ந்து மானிடர் வாய்மொழிதல் வேண்டும். 'ஒரு சொல் வெல்லும் , ஒரு சொல் கொல்லும்' என்பது சொல்லின் வலிமையைச் சுருக்கென உணர்த்துகிறது. சொல்லாடல் என்பது பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் பயத்தல் வேண்டும். தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் சொற்களைத் தவிர்த்தல் நலம் பயக்கும். “சொல்லுவதெல்லாம் மறைச்சொல்லினைப்போலப் பயனுளதாக”  வேண்டுமென்பார் மகாகவி. வாக்கினிலே யினிமையும். களிபடைத்த மொழியும் வேண்டுவாரவர். “காட்சி சொல்லாலே தோன்றிற்று ..... யார்கொல் இச்சொல்லின் செல்வன்” என முதன்முதலில் அனுமனின் சொற்களைக் கேட்ட  இராமன் வியந்து கூறுவதாகக்  கம்பன் பாடுவார். பண்ணமர்ந்த மென்மொழியார் என்பார் ஞானசம்பந்தர். சொற்றமிழால் பாடச்சொல்லிச் சுந்தரரை   இறைவனே நயந்து கேட்பார்
உலகப்பொதுமறை  தந்து வான்புகழ்கொண்ட வள்ளுவரும், சொல்வன்மை எனுமொரு தனியொரு அதிகாரம் தந்துள்ளார். ஆக்கமும் கேடும் சொல்லால் வருமெனவும், திறனறிந்து சொல்லுக சொல்லை யென்றும், பிறிதோர் சொல் வெல்லாவண்ணம் சொல்லுகவெனவும் சொல்லின் திறம் உணர்த்துவார்.
கூறும் மொழி யாவும் இனிமையுடையதாக இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவே  இனியவை கூறல் என்ற தனி அதிகாரம் படைத்துள்ளார். இன்சொல் இருக்கக் கடுஞ்சொல் கூறல் , கனியைத் தவிர்த்துக் காயைச் சுவைத்தலுக்கு ஒப்பாகும் என்றும், தீயினால் சுட்டபுண் ஆறிவிடும்; நாவினால் சுட்ட வடுவோ என்றும் ஆறாது என்றும், நா காக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்றும் சொல்லின் வலியை வலியுறுத்திக் கூறுவார் வள்ளுவர். இத்தோடு நில்லாது, ‘பயனில சொல்லாமை என்று மேலுமோர் அதிகாரம் இயற்றிப் போந்தார். சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க சொல்லில் பயனிலாச்சொல் என்றும், தீமையிலாத  சொலல் வாய்மை ஆகும் என்றும் சொல்லின் பயனை   பொய்யாமொழிப் புலவர்    விரிப்பார்.
தீச்சொல் தவிர்த்து தீஞ்சொல் பழகவேண்டும் நாம். சொல்லுக என்றும் சொல்லற்க என்றும் பாகுபடுத்திப் பாடினார் பழம் பாட்டி ஒளவை. இளம்பிராயத்திலேயே அவர்தாம்    சீராய்ப்  பேசுதல்  வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்க் குழந்தைகளுக்காக  தளிர்தமிழில் ஆத்தி சூடியும்    யாவருக்குமாக எளிய தமிழில்  கொன்றை வேந்தனும் பாடிக்கொடுத்தார் அந்தத் தமிழ் மூதாட்டி.


இருநூறு அறவுரைகள் அடங்கிய இவ்விரு சிறுநூல்களிலும் சொல்லுதல் எங்ஙனம் என்று விரித்துக் கூறியுள்ளார். இருபத்தியிரண்டு அறவுரைகள் மொழிதல் பற்றியவையாம். அவையாவன:

1.   ஒளவியம் பேசேல்                       (ஆ.சூ.)
2.   கண்டொன்று சொல்லேல்
3.   ஞயம்பட உரை
4.   வஞ்சகம் பேசேல்
5.   சித்திரம் பேசேல்
6.   சுளிக்கச் சொல்லேல்
7.   சொற்சோர்வு படேல்
8.   நொய்ய உரையேல்
9.   பழிப்பன பகரேல்
10.  பிழைபடச் சொல்லேல்
11.  மிகைபடச் சொல்லேல்
12.  மொழிவது அறமொழி
13.  வல்லமை பேசேல்
14.  வெட்டெனப் பேசேல்
15.  ஓரம் சொல்லேல்
16.  கீழோராயினும் தாழ உரை             (கொ.வே.)
17.  கூரம்பாயினும் வீரியம் பேசேல்
18.  தோழனோடும் ஏழைமை பேசேல்
19.  நைபவர் எனினும் நொய்ய உரையேல்
20.  மோனம் என்பது ஞான வரம்பு

மேற்கூறினவற்றை சற்று உற்றுநோக்கின், ஓருண்மை தெற்றெனப் புலப்படும். இருபது கூற்றுகளில்  மூவிடத்தில்  மட்டும் எவ்வாறு பேசுதல் வேண்டுமென அறிவுறுத்துகிறார் ஒளவை (ஞயம்பட உரை, மொழிவது அறமொழி, தாழ உரை என்பனவாம்). மற்றனைத்து இடங்களிலும் எவ்வாறு பேசுதல் ஆகாதெனக் கட்டளையிடுகிறார்.புது யுகம் படைக்கவிரும்பிய புதுமைப்புலவன் பாரதி இளையபாரதத்தினருக்கு புதிய ஆத்தி சூடி  பாடிக்கொடுத்தார்.இதிலுங்கூட பாரதி சொற்றிறம் பற்றி உரக்கப் பாடுவதாதெனின்:

1.        சொல்வது தெளிந்து சொல்
2.        தூற்றுதலொழி
3.        நேர்படப் பேசு
4.        மெல்லத்தெரிந்து சொல்
5.   வெடிப்புறப் பேசு
6.   மோனம் போற்று
     
 ஒளவை கூறும் பாங்கிலிருந்து சற்றே வேறுபடுத்தி, எவ்விதம் பேசுதல் வேண்டுமென பாரதி நேரடியாகவே கூறுவதறியலாம்.  மேலுமொரு சிறப்பு என்னவெனில்,  இருவரின் ஆத்தி சூடியிலும் பேச்சைத்தவிர்த்து வாளாவிருத்தல் பற்றியும் ஈற்றடியில் கூறுவது காண்க. பேசுதலொழித்தலே ஞானத்தின் எல்லை என்று மெளனத்தின் மேன்மையை  ஈற்றில் மெச்சுகிறார் ஒளவை.   பாரதியோ மெளனத்தைப் போற்றிக் கடைப்பிடிக்கச் சொல்லுகிறார். ஆம், சில சூழலில், பேசுதலைக் காட்டிலும் மெளன மொழியே மிக வலிமையுடைய மொழியாய் விளங்கும்.  சில கேள்விகளுக்கு வாளாவிருத்தல் பொருள்புதைந்த விடையாம். பேசிக் கெடுப்பதைக் காட்டிலும் பேசாதிருந்து சாதிப்பது பெரும் கலையே !

 இங்ஙனம், கடுஞ்சொல் தவிர்த்து இன்சொல்லும், வெஞ்சொல் தவிர்த்து  தண்சொல்லும், தீச்சொல்   தவிர்த்து  நற்சொல்லும் , பிழைச்சொல்  தவிர்த்து கவின் சொல்லும், இழி சொல்  தவிர்த்து செஞ் சொல்லும், வன்சொல் தவிர்த்து மென்சொல்லும், வசைச்சொல் தவிர்த்து இசைச்சொல்லும்  சொல்லுதல் நாளும் பழகுவோம்.

Friday, 17 June 2011

எடுத்திடுவேன் பிரமாணம்


ஐந்து வயதினிலே அப்பனே குருவானார்
ஆற்று மணல்தனிலே அரிச்சுவடி கற்பித்தார்
அழித்து எழுதிப் பழகினேன் அகர முதலாம்
அடுத்த வயதினில் அறிமுகமானேன்
அடித்துக் கற்பித்த திண்ணை ஆசானிடம்
ஆண்டுகள் உருண்டன பள்ளிகள் மாறின
ஆசிரியர் பலராயினர் அறிந்தேன் பல பாடங்கள்
கல்லூரியில் கால்பதித்து கற்றவை கணிசமானவை
கற்பித்தலே தொழிலெனக் கொண்டேன்
கற்றும் கற்பித்தும் களித்திருந்தேன்
காலம் கடந்ததை கவனியாதிருந்தேன்

தொலைநிலைக் கல்வியை நிருவகிக்கலாயினேன்
சோதனைகளை வெல்வதே சாதனையெனவானது
சாதிக்கத் திறனிருந்தும்
திட்டங்கள் பலவிருந்தும்
திகட்டாத ஆர்வமிருந்தும்
திண்ணிய உழைப்பிருந்தும்
எண்ணியவையெல்லாம் ஈடேறாதோ ?

எடுத்திடுவேன் பிரமாணம் இவ்வாறே :
உண்மை தவறேன் ,  உழைப்பைக் கைவிடேன்
உறுதி குலையேன் ,  ஊக்கம் குறையேன்
சூதை அறிவேன் ,     சூழ்ச்சியை வெல்வேன்
கவனம் சிதறேன் ,    காரியம் புரிவேன்
கொள்கை பிறழேன் ,  குற்றம் பொறுக்கேன்
இலக்கை எய்துவேன் , இனிதே வினைமுடிப்பேன்

எத்தித் திண்ணும் காக்கைகளை
புத்தி கொண்டு புறக்கணிப்பேன்
கொத்தித் திண்ணும் கொக்குகளை
குளத்தை விட்டே அகற்றுவேன்
பறந்து திண்ணும் பருந்துகளை
வலை வீசி வீழ்த்திடுவேன்
ஏய்த்துத் திண்ணும் நரிகளைக்
கண்ணி வைத்துக் களைந்திடுவேன்
மறைந்து திண்ணும் கரையாண்களை
மரித்துப் போகச் செய்திடுவேன்
பரவித் திண்ணும் களைகளை
பார்த்துப் பார்த்து களைந்திடுவேன்
சாதி பேசும் சந்தர்ப்பவாதியை
சாமர்த்தியமாய் சமாளிப்பேன்
சோம்பித் தூங்கும் கழுதைகளை
பொதி சுமக்கச் செய்திடுவேன்
வீண் பேச்சு வீரர்களை
வினை முடிக்க முடிக்கிடுவேன்

முன்னேறாய் முனைந்து செயல்படினும்
பயிரை வேலியே மேயுமாயின்
பார்த்து நிற்க வேண்டுமாயின்
பதவி துறக்கத் துணிந்திடுவேனே


                     தொலைநிலைக் கல்வி இயக்குநராக நிர்வாகத்தில் சந்தித்த 
                                    தடைக்கற்களைப் பற்றிய சங்கற்ப பா