எனது மின்னூல்கள்

Tuesday, 31 January 2017பயில்வோர்ப் பட்டுண்டு உலகம்

கல்வியை விற்றுக் கறைக்காசு குவித்த குபேரர்கள்
                                        கூட்டமாய் அடைபடட்டும்
கற்கையில் களம்புகுந்து அறப் போராடியோர்
                                   காலத்தே வெளிவரட்டும்
வித்தகம் உடையோர் விலைபோவாராயின்
                        கொட்டடியில் அடைபடட்டும்
சுத்தமனத்தோர் சுயத்தொடு வினைபுரிந்தோர்
                                வீதிதோறும் வெளிவரட்டும்
எத்தித் தின்போர் எதற்கும் துணிவோர் எளிதில்
                                             வாராது அடைபடட்டும்
நித்தியச் சோற்றிற்கு நிரந்தரம் இல்லாதோரெலாம்
                                                      நீதியுற வெளிவரட்டும்
கோடிகள் குவித்து கொட்டமடிப்போர் குறிவைத்தே
                                             கூண்டொடு அடைபடட்டும்
வாடிவதையுறுவோர் வளமொடு வாழ வழிகாட்டுவோர்
                    விரைந்து வெளிவரட்டும்
தவமென தாமே தனிவழி கண்டு மரபுரிமை முயல்வோர்
  முற்றாய் வெளிவரட்டும்
பனியில் உறைந்து வெயிலில் உலர்ந்த அறப்போராளர்
                                                              நலமே வெளிவரட்டும்
கள்ள நோக்குடன் கமுக்கச் சதிராடுவோர் கடையரென                                                        சடுதியில் அடைபடட்டும்
உள்ள சுத்தியொடு ஊருரிமைக்கு உழைக்கும் உத்தமர்
                                                              உடனே வெளிவரட்டும்
 படித்தவர் பொதுவெளி புகுதலும் பண்பாடே யென்போர்
                                                                 பரந்து வெளிவரட்டும்
அடுத்தவர் வெற்றி அபகரிக்கத் துடிக்கும் அரசியல் நரிகள்
                                                                  அன்றே அடைபடட்டும்
அறமொடு மறம் கரந்து அந்நியர் போற்றும் அறிவிலிகள்
                                                        அட்டியின்றி அடைபடட்டும்
தடியெடுத்தோர் எல்லாம் தண்டல்நாயகராய் எண்ணின்
தவறாதே அடைபடட்டும்
தடியடியே தனக்குவப்பாய்ப் பயிரைமேய்ந்த வேலிகளும்
                                            படிப்பினையாய் அடைபடட்டுமே!