எனது மின்னூல்கள்

Wednesday, 4 November 2015

தமிழும் தமிழரும்


         தமிழும் தமிழரும் தலைநிமிரட்டும்

   ( மெட்டு : காவடிச் சிந்து )

வீரமிகு தமிழர் அன்று
வேண்டியன செய்யா ரின்று
வேடிக்கை பார்ப்பாரடி கிளியே
வீணரென நிற்பாரடிகிளியே
வீணரென நிற்பாரடி

வன்கொடுமை பலவும் செய்து
வனிதையரின் சீர்மை சிதைத்து
பண்டு பண்பு துறப்பாரடி கிளியே
பழிசுமக்க நாணாரடிகிளியே
பழிசுமக்க நாணாரடி

சாதிச் சண்டை எல்லாம்
சமயச் சழக்கு  எல்லாம்
சந்தி சிரிக்குதடிகிளியே
சச்சரவு நீளுதடி - கிளியே
சச்சரவு நீளுதடி

சாதிகள் இருந்தால் என்ன
சமயங்கள் இருந்தால் என்ன
சாமி எங்கும் ஒன்றுதானடிகிளியே
சமரசம் வேணுமடி கிளியே
சமரசம் வேணுமடி 

எத்தனை வளங்கள் இங்கு
எல்லாமே எல்லோருக்கும்
எளியோரைக் காப்போமடிகிளியே
ஏற்றிடுவோம் சமத்துவமே கிளியே
ஏற்றிடுவோம் சமத்துவமே

பள்ளியிலே பயில்வதில்லை
பணிகளிலும் கொள்வதில்லை
மொழியையும் இழப்பாரோடி கிளியே
முகமிழந்து திரிவாரோடி கிளியே
முகமிழந்து திரிவாரோடி

தாயின்மொழி தமிழே யன்றோ
தண்டமிழின் சுவையும் ஒன்றோ
தமிழர்தாம் அறிவதில்லையேகிளியே
தனித்தமிழில் மொழிவோமடி கிளியே
தனித்தமிழில் மொழிவோமடி

பற்பல துறைகள் இன்று
பல்கிப் பெருகக் கண்டு
பாங்குடன் படைப்போமடி கிளியே
பன்முகந்தான் தமிழிற்குண்டு கிளியே
பன்முகந்தான் தமிழிற்குண்டு      
      
சோதனைகள் வந்தா லென்ன
போதனைகள் ஒன்றா என்ன
வேதனைகள் தீர்ப்போமடிகிளியே
சாதனைகள் புரிவோமடி கிளியே
சாதனைகள் புரிவோமடி

                              சபா வடிவேலு

Thursday, 29 October 2015

காவடிச் சிந்து - கந்தக் காவடி

       கந்தக் காவடி    

   (மெட்டு: காவடிச் சிந்து)

கந்தன் என்னும் பேரைக்
காதினிலே கேட்டாலுமே
காதல் பெருகுதடிகிளியே
களிமிகு கொள்ளுதடி கிளியே
களிமிகு கொள்ளுதடி

வேலன் என்னும் பேரை
வேறெவரோ கூறினாலும்
வேட்கை கொள்வேனடிகிளியே
வேறெதுவும் வேண்டேனடி  – கிளியே
வேறெதுவும் வேண்டேனடி

முத்துக் குமரன் பேரை
முணுமுணுக்கக் கேட்டாலுமே
முற்றும் இனிக்குதடிகிளியே
முன்னைவினை தீருதடி கிளியே
முன்னைவினை தீருதடி

கந்தனென்றும் கடம்பனென்றும்
கார்த்திகேய கதிர்வேலென்றும்
காசினியில் அழைப்பாரடிகிளியே
கருத்தினிலே நின்றானடி கிளியே
கருத்தினிலே நின்றானடி
  
தண்டமிழின் தலைவனாவான்
தந்தைக்கே குருவுமானான்
தணிகைவேலன் தருவானடிகிளியே
தவமதுவே தழைக்குதடிகிளியே
தவமதுவே தழைக்குதடி

ஆறுபடை வீடுகொண்டான்
ஆற்றுப்படைத் தலைவனான்
ஆடுமயில் அமர்ந்தோனடிகிளியே
ஆறுமுகம் அருள்வானடி கிளியே
ஆறுமுகம் அருள்வானடி

சேவற்கொடியோன் செந்தில்
சேரும் அடியாரெல்லாம்
சேமம் அடைவாரடிகிளியே
சேவடி சேர்வாரடிகிளியே
சேவடி சேர்வாரடி                                                                     திருச்சிராப்பள்ளி  .... சபா வடிவேலு
  
Thursday, 15 October 2015

குறவஞ்சிப் பாடல் - சிராப்பள்ளி குறவஞ்சி

    சிராப்பள்ளி குறவஞ்சி
வயல்சூழ்ந்து வளம் கொழிக்கும் வண்ண மலை அம்மே யம்மே !   
வயலூரை அண்டையிலே கொண்ட மலை எங்கள் மலை !
வாழையெல்லாம் வாழ்த்தி நிற்கப் பேணும் மலை அம்மே யம்மே !
வான்முகிலும் குடைப் பிடித்து வணங்கும் மலை எங்கள் மலை !
வேணுவும்தான் படுகையிலே பாடும் மலை அம்மே யம்மே !
வெற்றிலையும் செங்கரும்பும் விளைக்கு மலை எங்கள் மலை !
நீர்தேக்கும் தெப்பக்குளம் திகழும் மலை அம்மே யம்மே !
நீலகண்டன் நெடிதுயர்ந்து நிலைக்கும் மலை எங்கள் மலை !

அரங்கனும்தான் அக்கரையில் பார்க்கும் மலை அம்மே யம்மே !
ஆவலுடன் காவிரித்தாய் அணைக்கும் மலை எங்கள் மலை !
திக்கெட்டுமே காட்சிதரும் தெய்வ மலை அம்மே யம்மே !
திரு ஆனைக்கா அருகிருக்கும் அழகு மலை எங்கள் மலை !
எறும்பூரும் இணையெனவே இலங்கும் மலை அம்மே யம்மே !
ஏறனவன் துணையிருக்கும் கோட்டை மலை எங்கள் மலை !
வெக்காளி எல்லை நின்று காக்கும் மலை அம்மே யம்மே !
விறலிமலை வேலவனின் அப்பன் மலை எங்கள் மலை !

***********அய்யர்மலை ஈங்கோய்மலை அணிமை மலை யம்மே !
உய்யக்கொண்டான் உள்ளூரில் உறையும் மலை யம்மே !
பட்டூரின் பரமனுக்குப் பக்க மலை  யம்மே !
பாடல்பெற்ற தலங்க ளெல்லாம் சூழு மலை  யம்மே ! **********

இடர்நீக்கு நெடுங்களத்தான் அணுக்க மலை அம்மே யம்மே !
ஈடில்லா கற்றளிதான் ஈர்க்கும் மலை எங்கள் மலை !
கரிகாலன் கல்லணையைக் காக்கும் மலை அம்மே      யம்மே !
களஞ்சியந்தான் காத்திடுமே காவல் மலை எங்கள் மலை !
உச்சியிலே ஆனைமுகன் அமர்ந்த மலை அம்மே யம்மே !
உறையூரில் உயர்ந்து நிற்கும் பண்டு1 மலை எங்கள் மலை !
தாயாகித் தயைபுரிந்த தாணு மலை அம்மே யம்மே !
தமிழ் ஞான சம்பந்தன் பாடும் மலை எங்கள் மலை !

நலமெல்லாம் நமக்களிக்கும் நந்தி மலை அம்மே யம்மே !
நாவுக்கரசர் நற்றமிழ்தான் நண்ணும் மலை எங்கள் மலை !
தாயுமானான் தமிழ் பாடத் தந்த மலை அம்மே யம்மே !
தமிழ் மொழியின் உபநிடதம்2 தந்த மலை எங்கள் மலை !
மட்டுவார் குழலிநாதன் மேவும் மலை அம்மே யம்மே !
மட்டில்லா மகிமையுறு தென்கயிலை எங்கள் மலை !
பாவமெல்லாம் போக்கிடுமே சுயம்பர்3 மலை அம்மே யம்மே !
பங்குனியில்4 பகலவனும்  நுழையும் மலை எங்கள் மலை !

************மக்களெல்லாம் மனமுருகிப் பாடும் மலை யம்மே !
சிக்கலெல்லாம் தீர்த்துவைக்கும் சிராப்பள்ளி யம்மே !
நல்லதெல்லாம் நல்கிடுமே நாதன் மலை யம்மே !
அல்லதெல்லாம் அகற்றிடுமே ஆன்ற மலை யம்மே ! *************
ஆலோன்தனைப் பாடிடுமே ஆதி மலை அம்மே யம்மே !
அடியார்கள் அண்டிவரும் அரனார் மலை எங்கள் மலை !                   எங்கள் மலை , எங்கள் மலை, எங்கள் மலை !
------------------------------------------------------------------------
குறிப்புகள் :
1.   திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் குன்று 340 கோடி ஆண்டுகளுக்கும் மேலான பழைமையானது.
2.   தாயுமானன் என்னும் சிவஞானி இயற்றிய பாடல்களின் தொகுப்பு (‘தாயுமானவர் பாடல்கள்’) தமிழ் மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்பெறுகிறது.
3.   தாயுமானவர் கோவிலின் சிவலிங்கமானது சுயம்பு லிங்கம் ஆகும்.
4.      ஆண்டுதோறும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆம் நாட்களில் மேற்கில் மறையுமுன்  சூரியக் கதிர்கள் கோயிலினுள் நுழைந்து லிங்கத் திருமேனி மீது படருதல் வனப்புறு காட்சியாம்! (சிவ லிங்கம் மேற்கு நோக்கியுள்ளது)
                           ------------------------------------------------------------------
                             
96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று குறவஞ்சி என்பதாம். இதில் தலைவிக்கு குறத்தி குறி சொல்வதற்கு முன்பாய் தன் மலைவளம் கூறுதல் என்பது இவ்விலக்கியத்தின் ஒரு உறுப்பு. அம்மரபிற்கேற்ற வண்ணம் இச்செய்யுளை அதே பண்ணில் பாடுமுகத்தான் அமைத்துள்ளேன். நன்றுடையானை, தீயதில்லானை வாய் ஆரப் பாடிக் களிப்பீர் !  உள்ளம் குளிர்வீர்  !                                                                                                                                                                                                                 -------------------------------------------------------------------- 
                                                                                                                                                                                          எனது இப்பாடலை திருமதி சாருமதியின் இன்னிசைக் குரலில் கேட்க இதைத் தேர்வு செய்யவும்             

                        --------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

Sunday, 20 September 2015

மறதி எனும் மா பிணி

மறதி எனும் மா பிணி                                                                                                         
உன்னதமாம் மாந்தர் மூளை                            உலகினில் ஒப்பிலை வேறே
பிறப்புதொட்டு இறப்பு வரை
பிறழாது நிலைக்குமோ நினைவுகள் ?

கண்டதும் கற்றதும் கேட்டதும் எண்ணியவும்
கணக்காய் நினைவில் நிற்பதும் உண்டாமோ?
மறக்க விழைவது மண்டிக் கிடக்குமே
இருக்க விழைவது இல்லாது ஒழியுமே

பக்கம் பக்கமாய்ப் படித்தது என்னே?
பலகாலும் நினைவில் படிந்தது என்னே?
சொடுக்கில் சொற்கள் அடுக்கியது என்னே?
சொல்லாது இப்போது மறைவது என்னே?

மறதி மனிதர்க்கு நன்றா என்ன?
மக்கும் நினைவுகள் பலவா என்ன?
மதியும்மறதிநோய்உறுமா என்ன?
முதியோர் அவதி ஒன்றா என்ன?

பழகிய பெயரும் பதுங்கி நிற்க
பழக்க வழக்கம் தடுமாறித் திகைக்க
செய்வது செம்மையாய் செய்யாது தவிக்க
முதியோர் மறதி பிணியெனக் கண்டோம்

இடையறா மனப் பயிற்சியாம் என்றும்
இறுக்கமுறா மனநலமாம் இரவுதொறும்
இயல்பாய் உறக்கமாம் இதமாய் ஊணாம்
இனியன இவையெலாம் நாடொறும் கொள்ள

கள்ளும் புகையும் இன்னாதெனக் களைந்து
உள்ளும் புறமும் வெகுளி துறந்து
உற்றார் உறுதுணை தமக்கென உவந்து
முதியோர் முயலமறதிநோய்போமே !

முற்றும் இயல்பே முதியோர் ஞாபகமறதி
சற்றும் தகாதே இளையோர்க்கு இந்நோய்
கவனச் சிதறல் கருத்துக் குலைவாமே
மனப் பயிற்சி மறதியைப் போக்கிடுமே !

கல்விப் பயிற்சி கடைவரை கைகொடுக்கும்
கவனப் பயிற்சி நினைவுகளை ஏந்தும்
நினைவுக் கலை பயில்வீர் நித்தமும்
நனவுலகை வெல்வீர் நவபாரதத்தீரே !                                      ---- சபா . வடிவேலு                                                                  (உலக ஞாபகமறதி நோய் தினம்செப். 21
(World Alzheimer’s Day)