எனது மின்னூல்கள்

Wednesday, 4 November 2015

தமிழும் தமிழரும்


         தமிழும் தமிழரும் தலைநிமிரட்டும்

   ( மெட்டு : காவடிச் சிந்து )

வீரமிகு தமிழர் அன்று
வேண்டியன செய்யா ரின்று
வேடிக்கை பார்ப்பாரடி கிளியே
வீணரென நிற்பாரடிகிளியே
வீணரென நிற்பாரடி

வன்கொடுமை பலவும் செய்து
வனிதையரின் சீர்மை சிதைத்து
பண்டு பண்பு துறப்பாரடி கிளியே
பழிசுமக்க நாணாரடிகிளியே
பழிசுமக்க நாணாரடி

சாதிச் சண்டை எல்லாம்
சமயச் சழக்கு  எல்லாம்
சந்தி சிரிக்குதடிகிளியே
சச்சரவு நீளுதடி - கிளியே
சச்சரவு நீளுதடி

சாதிகள் இருந்தால் என்ன
சமயங்கள் இருந்தால் என்ன
சாமி எங்கும் ஒன்றுதானடிகிளியே
சமரசம் வேணுமடி கிளியே
சமரசம் வேணுமடி 

எத்தனை வளங்கள் இங்கு
எல்லாமே எல்லோருக்கும்
எளியோரைக் காப்போமடிகிளியே
ஏற்றிடுவோம் சமத்துவமே கிளியே
ஏற்றிடுவோம் சமத்துவமே

பள்ளியிலே பயில்வதில்லை
பணிகளிலும் கொள்வதில்லை
மொழியையும் இழப்பாரோடி கிளியே
முகமிழந்து திரிவாரோடி கிளியே
முகமிழந்து திரிவாரோடி

தாயின்மொழி தமிழே யன்றோ
தண்டமிழின் சுவையும் ஒன்றோ
தமிழர்தாம் அறிவதில்லையேகிளியே
தனித்தமிழில் மொழிவோமடி கிளியே
தனித்தமிழில் மொழிவோமடி

பற்பல துறைகள் இன்று
பல்கிப் பெருகக் கண்டு
பாங்குடன் படைப்போமடி கிளியே
பன்முகந்தான் தமிழிற்குண்டு கிளியே
பன்முகந்தான் தமிழிற்குண்டு      
      
சோதனைகள் வந்தா லென்ன
போதனைகள் ஒன்றா என்ன
வேதனைகள் தீர்ப்போமடிகிளியே
சாதனைகள் புரிவோமடி கிளியே
சாதனைகள் புரிவோமடி

                              சபா வடிவேலு