எனது மின்னூல்கள்

Thursday 1 September 2016




கடிதம் எனும்  தூது
                                                           
கார்மேகம் வான வீதியில் ஊர்வலம் கண்டதும்
இடி முழக்கி மின்னல் வெட்டி மிரட்டியதுவும்
அம்மாவைக் கட்டியே அர்ச்சுனா என்றதுவும்
மழையெனும் மாயம் மறுபடியும் நிகழ்ந்ததுவும்
குளம் குட்டையெல்லாம் நிறைந்து தளும்பியதுவும்
குஞ்சு மீன்கள் ஆங்கே உயிர்த்து  விளையாடியதுவும்
கூட்டங் கூட்டமாய்க் கொக்குகள் குவிந்ததுவும்
குள்ளப் பசுவதுவும் கொட்டிலில் ஈன்றதுவும்
கொல்லையில் ரோசா பூத்துச் சிரித்ததுவும்
குலை தள்ளிய வாழையை வியந்து மகிழ்ந்ததுவும்
கோயில் கொடியேறி கொண்டாட்டம் துவங்கியதுவும்
ஒன்று விடாது உரைக்கும் மடலதுவாம்
நன்று நம்மிடைப் பழகிய மரபதுவாம்
இன்று கடிதக் கலையதுவும் கரைந்து மறைந்ததுவே
குறுஞ் செய்தி மின்னஞ்சல் குறுக்கினவோ
குழுக்கள் கூட்டும்  இணையந்தான்  விரட்டியதோ
விரைந்து செல்லும் இளையோர்காள் கேளீர் !
கலை நயமாம் மடல் பல வரைதல்
கடுகுச் செய்தியும் களிப்பை யூட்டும்
கற்பனை ஊறியே உள்ளம் உவக்கும்
கைவிடாதீர் கவின் தமிழில் கடிதம் வரைதல் !
                           
                             ( உலக கடிதம் எழுதும் தினம் – செப்டெம்பர் 1)










Tuesday 9 August 2016



நெஞ்சு பொறுக்குதில்லையே -
கனலே நீயும் களங்கமுற்றாய்!

காமத்தில் வெந்தக் காமுகனைக்
கணத்தில் கருக்கினாய் சரியே!
கள்ளமிலாச் சிறுமியைச் சிதைத்தல் அறமோ?
களங்கமுற்றாய்த் தீயே நீயும் ஓர் ஆணாய்!
(30.7.16 அன்று  விழுப்புரத்தில் 32 வயது வெறியன் ஒருதலைக் காதல் கொண்டு 17 வயது சிறுமியைத் தீயிட்டுக் கொன்ற கொடுமை)

      
கழிப்பிடத்தும் கசடர் களிப்பு

காரிருள் போர்வையில் காமக்கயமை வெறியாட
கழிசடை இருவரும் காட்டுப் பன்றிகளாயினரே
ஒருவர் அழுக்கில் ஒருவர் கூடிடவும்
ஒப்பக் கூசாதோ வேசை உறுப்பிற்கும்

கழிப்பவளைக் களித்தீர் புதரிடை மாய்த்தீர்
கூறக்கூசிடும் கொடுமைதான் புரிந்தீர்
கொடும்பழி கொண்டீர் வாழுரிமை இழந்தீர்
அற்று விழட்டும் உம் ஆண் எனும் அடையாளம்


                (31.7.16 அன்று தஞ்சை ,சாலியமங்கலம் நிகழ்வு)

Saturday 16 July 2016










புதிய தலைமுறை தொலைக் காட்சியில் 15/7/2016  அன்று மாலை  4.30 மணிக்கு "கற்க கசடற"  நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.  தொலைநிலைக் கல்வி பற்றி நான் பேசியுள்ளதைக் காண இதைச் சொடுக்கவும் :

Sunday 3 July 2016



 நூல்கள் நம் உற்ற தோழர்கள். தமிழ் இலக்கிய  ஈர்ப்பினால் .   நான்              வாங்கி, படித்து முடித்த தமிழ் நூல்களைப் பட்டியலிட்டுள்ளேன்.                      அவற்றைக் காண விழையின் இதைச் சொடுக்கவும் :

Friday 1 July 2016



பல  தலைப்புகளில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்க விரும்பினால்  இதைச் சொடுக்கவும் ; (கோப்பை  பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)


  

Thursday 30 June 2016



நான் படித்த நூல்களைப் பற்றிய எனது விமரிசனங்களைக் காண இதைச் சொடுக்கவும்.  (கோப்பை  பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)

Monday 30 May 2016









யாருக்கு மதிப்பு
மரித்ததும் –
மனிதவுடல் மயானத்துச் சாம்பல்
விலங்கோ 
காட்சியாகும் கலைப்பொருளாம்
கூறிடுவீர் , யாருக்கு மதிப்பு?
மனிதராமாக்களா?





              யாரிடம் போராட?

நிலப்பரப்பில் எங்கோவொரு நீர்ப்பரப்பு இங்கேயாம்
நீர்ப்பரப்பில் ஆங்காங்கே நிலப்பரப்பு அங்கேயாம்
இயற்கைக் கொடையில் இத்தனை அநீதியா? 
சமநீதி கோரி யாரிடம் போராட?

சூல்கொண்ட மேகங்களே
மறித்து நிற்கும் மலையைத் தாண்டி
மறுபுறமும் பொழிவாய் மழையை
நிலத்தில் நீதி நாட்டிடுவாய்
            (அண்மையில் கேரளம் சுற்றிவந்தபின் மனதில் தோன்றியது) 

Saturday 20 February 2016

எனது அண்மைக் கவிதை



உயிர்கள் உவந்து வாழ்கவே


கருமை கரைந்திட பொன்னொளிக் கதிர்களொடு
காலை புலர்ந்தது உலகம் உயிர்த்திடவே
இருகண் இன்புற இலங்கிடும் இயற்கை
இன்தமிழ்க் கவிதை விரித்திடும் இறக்கை

பாதங்கள் பழகின பச்சைப் புல்லிடை
செவிகள் தோய்ந்தன புள்ளின ஓசையில்
மூக்கும் துய்த்தது மயக்குறு சுகந்தமே
கண்கள் உண்டன கவின்மிகு காட்சிகள்

சின்னஞ்சிறு பறவை கூட்டாய்க் குளித்திட
கன்னங்கரேலெனப் பெருவயிற்று எருமைகள்
கன்றுகள் தொடர்ந்தசைய சேறாடச் சென்றிட
கறப்பாடாம் கறுப்பாடும் மந்தையென மேய்ந்திடுமே

சுரந்து சுரந்து புரக்கும் சுந்தரப் பசுக்கள்தம்
சுற்றமொடு கன்றாட மேய்ச்சல் நிலம் நோக்கிட
பஞ்சாரம் விடுத்துக் கோழிகள் குஞ்சொடு கிளறிட
பார்த்துவக்கப் பலவுண்டாம் சிங்காரச் சிற்றூரிடையே 


நாள் முழுதும் நடந்திடலாம் நந்தவனங்களிடை
நறுமலர்கள் கொய்திடலாம் நாதன் அடிசூட
சுவைமிகு கனிகள் தேனொடு தேர்ந்திடலாம்
சுனைதரு குளிர்நீர் சுகமாய்ப் பருகிடலாம்

குளத்து மீன்கூட்டம் குதுகலித்துக் கூடியாட
குத்துடை கொக்கும் ஒற்றைக்கால் தவமிருக்க
வண்ணத்துப் பூச்சிகளின் பூவிருக்கை மாநாட்டில்  
வாத்துகள் ஒலியெழுப்பி வளையவளைய வந்தனவே !

அடர்ந்த வனங்களில் அழகியல் மோனிக்க
ஆர்க்கும் அருவிகள் ஆனந்தத் தாண்டவமிட
தருக்கள் மலர்மெத்தை தரைமீது தாம்விரிக்க
தளும்பும் தடாகத் தாமரை முகம் விரிக்குமே !

தெருட்டும் மின்னலொடு இடியுந்தான் முழங்கிட
மருளும் மானினம் மாயமாய்த் தாவிட
கருவண்டுக் கூட்டமோ கள்ளுண்டு பண்ணிசைக்க
கருமேகம் வான்கண்டு கானமயில் களிநடமிடுமே ! 


மலையுறை மந்திகள் கிளைவிட்டுக் கிளையாட
கலையுறை கற்றளி காவியங்கள் கதைத்திட
குன்றன்ன களிறுந்தன் பிடியுடன் பிணைந்தாட
குறுகுறுப்புக் குறியீடாய்க் குறுமுயல் குதித்தோடுமே !

உண்ணவும் பருகவும் சுவைக்கவும் தரிக்கவும்
உடுக்கவும் உறங்கவும் உவக்கவும் உறையவும்
இயற்றவும் இசைக்கவும் இயங்கவும் இயல்வது
இயற்கையின் இனிய இயக்கம் அன்றோ ?

மண்ணும் மலையும் மாகடலும்
நீரும் நெருப்பும் நீள்விசும்பும்
வளியும் ஒளியும் ஒருங்கே
      உயிர்கள் உவந்து வாழவேயாம் ! 

Wednesday 10 February 2016




கருத்துள்ள பாடல்கள் சிந்தைக்கு விருந்து. இனிய இசை செவிக்கு விருந்து. இசையுடன் கூடிய பாடல்களோ இனிதினும்  இனியவை.  என்  பாடல்கள் சிலவற்றை  இசைக்கலைஞர்களின் இனிய குரலில் இசைக்கச் செய்து ஒலிக்கோப்பாக இணைத்துள்ளேன். கேட்டு மகிழ இதைச் சொடுக்கவும் :
 


Tuesday 9 February 2016





    புதுப்புனல் கொணர்வாய் பொன்னியே


வாழி நீ வருவாய் எம் காவிரித்தாயே
வழி மீது உயிர் வைத்துக் காத்திருப்போமே
குடகினில் பிறந்தோய் குதித்தோடி வந்தாயே
குன்றா மாமேகம் கொடுக்கப் பெருகுவையே

வளநாடாம் கன்னடம் கடந்து  தவழ்ந்தாயே
வழியெலாம் வண்டல் வளப்பம் நிறைப்பாயே
மேட்டூரில் தேங்கி நின்று மெதுவாய் நீள்வாயே
கொடுமுடி மும்மூர்த்தி முகம்பார்த்து நடந்தாயே

கடம்பவன ஈசனைக் கண்ணாரக் காண்பாயே
செந்துறைப் படியேறி பரமனைப் பாடினாயே
குணசீல கோவிந்தன் குளிர்ந்திடவே குனித்தாயே
கொள்ளிடம் கிளைத்தே அரங்கனை அணைத்தாயே

சிராப்பள்ளிக் குன்றானை அடிதொட்டு அகன்றாயே
கல்லணை புக்கி வாய்க்காலென வடிவாயே
அய்யாறாய் ஆகித்தான் கும்பநகர் செழித்தாயே
ஆரூரை  அடுத்து ஆடுதாண்டும் காவிரியே

மூங்கில் படுகையிலே பண்ணிசைத்தோம்
கரும்புக் காட்டிடையே களித்திருந்தோம்
வாழைத் தோட்டத்தே வளங்கொழித்தோம்
வெம்பசிக்கு செந்நெல் செழித்திருந்தோம்

கனிகள் சுவைத்தோம் மலர்கள் சூடினோம்
தாகம் தீர்த்தோம் தாம்பூலம் தரித்தோம்
கழனி காத்தோம் கலைகள் வார்த்தோம்
காவிரியே நின்னால் நெடுநாள் யாமும்

நலிவுற்றே இன்று நீ நடை தளர்ந்தாய்
நதி இழந்து நாங்களும் நலமழிந்தோம்
அகண்ட காவிரியும் அடி சுடலாயிற்றே
ஆழ்துளைக் கிணறுகள் அடிவயிறுயேற்றே

வாழையொடு வெற்றிலை கரும்புந்தான் காணலியே
நெல்விளைந்த வயலெலாம் வீட்டுமனை ஆயிற்றே
பொங்கிய பொன்னியும் புனல் இழக்கலாகுமோ ?
காமதேனும் தன் சுரப்பு இழக்கக் கூடுமோ ?

வனப்புறு நல்லாள் நீரிழந்து நலிய
வான்மழை பொய்த்து வளமெலாம் குன்ற
மன்னுயிர் பிழைத்து மனமெலாம் திரிய
நின்கடனன்றோ தாயே எம்முயிர் காப்பதும் 

புதுப்புனல் கொணர்வாய் பொன்னியே
புண்ணியத் துறைகள் யாமாடவே
கரைபுரண்டு ஓடுவாய் அன்னையே
காலமும் களஞ்சியந்தான் காத்திடவே  

Monday 25 January 2016

        கல்வி  தருவாள்  கலைமகள்


கண்ணினும் மேலாம் கல்விஅகக்
கறைகள் களைவதாம் கல்வி
கலைகள் பெருக்கிடும் கல்விமனக்
கவலைகள் போக்கிடும் கல்வி              …..  (கண்ணினும்)               

அறிவைப் பெருக்கிடும் கல்விஆர்க்கும்
ஆக்கம் தந்திடும் கல்வி
இன்பம் ஈந்திடும் கல்வி என்றும்
ஈயக் குறையாக்  கல்வி                   …..     (கண்ணினும்)    
                         
உலகை உய்த்திடும் கல்விநமக்கு
உண்மைகள் உரைத்திடும் கல்வி
நாளும் வளர்வதாம் கல்விஎவரும்
நாடிப் பெறுவதும் நற்கல்வி                …..    (கண்ணினும்)   
                  
பல்துறை கொண்டிடும் கல்விதிறன்
பல்கிப் பெருக்கிடும் கல்வி
தகைமை தருவது  கல்விஎளியோர்
தாழ்வு தகர்ப்பதும் கல்வி                   …..     (கண்ணினும்)    
                  
சமயம் வெல்வது கல்விவீண்
சாதிகள் கடப்பதும் கல்வி
சமத்துவம் புரிவதும் கல்விஎதிலும்
சாதனை விளைப்பதும் கல்வி            …..      (கண்ணினும்)       
               
ஏழமை விரட்டிடும் கல்விஇல்லார்
ஏற்றம் தீட்டிடும் கல்வி
ஞாலம் சுருக்கிடும் கல்விஉயர்
ஞானம் தருவதும் கல்வி                  …..      (கண்ணினும்

சிந்தனை சீர்த்திடும் கல்விநம்
         சிறுமைகள் தீர்த்திட வேண்டுமே
         புலமைகள் நிறைத்திடும் கல்விபலபல
புதுமைகள் துலக்கிட வேண்டுமே           ….. (கண்ணினும்)      

பேதைமை போக்கிடும் கல்விநல்ல
         மேதைமை வார்த்திட வேண்டுமே
         கீழமை விரட்டிடும் கல்வி  – இனிய
         தோழமை வளர்த்திட வேண்டுமே     …..    (கண்ணினும்)   

         அன்பைப் போதிக்கும் கல்விமாந்தருள்
         பண்பை வளர்த்திட வேண்டுமே
         நாநயம் கற்பிக்கும் கல்விநம்மிடை
         நாணயம் நாட்டிட வேண்டுமே        …..     (கண்ணினும்)   

             
இயற்கை  ஆய்ந்திடும்  கல்விஎன்றும்
இறைமை உணர்த்திட வேண்டுமே
கல்வியின் நாயகி கலைமகளேஎமக்கு
காலமும் நல்குவாய் நற்கல்வி             …..  (கண்ணினும்)