எனது மின்னூல்கள்

Tuesday 9 February 2016





    புதுப்புனல் கொணர்வாய் பொன்னியே


வாழி நீ வருவாய் எம் காவிரித்தாயே
வழி மீது உயிர் வைத்துக் காத்திருப்போமே
குடகினில் பிறந்தோய் குதித்தோடி வந்தாயே
குன்றா மாமேகம் கொடுக்கப் பெருகுவையே

வளநாடாம் கன்னடம் கடந்து  தவழ்ந்தாயே
வழியெலாம் வண்டல் வளப்பம் நிறைப்பாயே
மேட்டூரில் தேங்கி நின்று மெதுவாய் நீள்வாயே
கொடுமுடி மும்மூர்த்தி முகம்பார்த்து நடந்தாயே

கடம்பவன ஈசனைக் கண்ணாரக் காண்பாயே
செந்துறைப் படியேறி பரமனைப் பாடினாயே
குணசீல கோவிந்தன் குளிர்ந்திடவே குனித்தாயே
கொள்ளிடம் கிளைத்தே அரங்கனை அணைத்தாயே

சிராப்பள்ளிக் குன்றானை அடிதொட்டு அகன்றாயே
கல்லணை புக்கி வாய்க்காலென வடிவாயே
அய்யாறாய் ஆகித்தான் கும்பநகர் செழித்தாயே
ஆரூரை  அடுத்து ஆடுதாண்டும் காவிரியே

மூங்கில் படுகையிலே பண்ணிசைத்தோம்
கரும்புக் காட்டிடையே களித்திருந்தோம்
வாழைத் தோட்டத்தே வளங்கொழித்தோம்
வெம்பசிக்கு செந்நெல் செழித்திருந்தோம்

கனிகள் சுவைத்தோம் மலர்கள் சூடினோம்
தாகம் தீர்த்தோம் தாம்பூலம் தரித்தோம்
கழனி காத்தோம் கலைகள் வார்த்தோம்
காவிரியே நின்னால் நெடுநாள் யாமும்

நலிவுற்றே இன்று நீ நடை தளர்ந்தாய்
நதி இழந்து நாங்களும் நலமழிந்தோம்
அகண்ட காவிரியும் அடி சுடலாயிற்றே
ஆழ்துளைக் கிணறுகள் அடிவயிறுயேற்றே

வாழையொடு வெற்றிலை கரும்புந்தான் காணலியே
நெல்விளைந்த வயலெலாம் வீட்டுமனை ஆயிற்றே
பொங்கிய பொன்னியும் புனல் இழக்கலாகுமோ ?
காமதேனும் தன் சுரப்பு இழக்கக் கூடுமோ ?

வனப்புறு நல்லாள் நீரிழந்து நலிய
வான்மழை பொய்த்து வளமெலாம் குன்ற
மன்னுயிர் பிழைத்து மனமெலாம் திரிய
நின்கடனன்றோ தாயே எம்முயிர் காப்பதும் 

புதுப்புனல் கொணர்வாய் பொன்னியே
புண்ணியத் துறைகள் யாமாடவே
கரைபுரண்டு ஓடுவாய் அன்னையே
காலமும் களஞ்சியந்தான் காத்திடவே  

No comments:

Post a Comment