எனது மின்னூல்கள்

Tuesday, 26 April 2011


....ஏன் சென்றாய் ?  ....


பூமி சிறக்கப் பூத்துவந்தாய்
சாமியெனவே கருத்தில் கொண்டார்
சாதித்துக் காட்டினாய் சமுதாயத்தொண்டு
சாதியைக் கடந்து  சமயம் வென்று


கை அசைய சித்து பிறந்தது
கண்அசைய கங்கை வந்தாள்
தலை அசைய தன்வந்திரி வந்தான்
விரல் அசைய விளையாட அரங்கமானது

பல் அசைய பல்கலையே உதித்தது
நா அசைய ஏழிசை செழித்தது
மெய்  அசைய ஏழமை சென்றது
பார் அசைய ஏனின்று சென்றாய் ?


                                         மானுட சேவையால் மகத்துவம் அடைந்த
                                          சாய் பாபா மறைவிற்கான இரங்கற் பா

Monday, 25 April 2011

 .... பூத்ததுவே புதியதொரு தலைமுறை   ....   


வித்ய விவேகர் விரும்பிய வரமாய்
விளைந்தனள் எம்குலம் புகழொடு பெருக
வந்தனள் வடிவுறு நல்லாள் அவளே
வர்ஷா எனப் பெயர் கொளவேஇகமது  இரப்பது  இனியதம்  மழையே
இல்லறம்  சிறப்பது  நன்மக்கள்  வரவே
வர்ஷா  நீயும் வர்ஷிப்பாய்  ஈங்கு
வளம்பல  வரவும் திறம்பல பெறவும்பாரினில் சிறந்திருந்த பாரதத்தின் பாதமாய்
பண்டுதொட்டு புகழுடைத்து தமிழ்கூறும் மாநிலமே
மாதவமே செய்திடனும் மங்கையராயிங்குப் பிறந்திடவே
மன்னுபுகழ் பெற்றாய் இக்குலத்தில் நீயும் உதித்தேஅன்பும் அறமும் அகத்தே பெற்றனர்
கல்வியும் கலையும் கண்களாய் உடையனர்
தானமும் தர்மமும் தானுடையர் ஆயினர்
காதலும் கடமையும் கலந்தே பயின்றனர்வீரமும் விவேகமும் விளைத்து மகிழ்ந்தனர்
பாட்டும் பண்ணும் பழகிக் களித்தனர்
இசையும் கூத்தும் இழைத்து வந்தனர்
வேள்வியும் வித்தையும் வேண்டிப் பெற்றனர்மோனமும் ஞானமும் முதலில் முயன்றனர்
பக்தியும் முக்தியும் பாருக்கே பகன்றனர்
வேதமும் வேதாந்தமும் வெளியுலகுக் களித்தனர்
சித்தும் சித்தாந்தமும் சிறக்கக் காட்டினர்
மந்திரமும் தந்திரமும் மானுடர்க்குப் புகட்டினர்தவமும் தத்துவமும் தரணிக்களித்தனர்
பசுவுக்கும் பறவைக்கும் நேர்செய்யலாயினர்
பயிருக்கும் கொடிக்கும் பரிவுடையராயினர்
பகுத்தறிவும் பழமையும் பாருக்கு உரைத்தனர்
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மெய்ப்படுத்தினர்காண விழைந்தனள் இவையாவும் காவிரித்தாய்
கண்டதும் கவிதையாய்ப் பொங்கிப் பெருகினள்
வண்டலும் வளமையும் வாரியே வழங்கினள்
தண்டமிழ் நாட்டில் செழுமையே நிறைத்தனள்பாட்டன் பகன்றவையாவும் பழம் பெருமையம்மா
பாரிலின்று பரிதவித்து நிற்பதுநம் சிறுமையம்மா
கனவாய்ப் போனதுவே காவிரியின் பெருவெள்ளம்
கரிகாலன் கரையதுவும் காலடிப் பாதையானதுவே
அகண்ட காவிரியும் ஆடுதாண்டிக் காவிரியானதேபுதுவரவே             புத்துயிரைப்          புகட்டிடுவாய்
புதுப்பொலிவே   புகழனைத்தும்     ஈட்டிடுவாய்
புதியதலைமுறையே புதுமையெனப் புறப்படுவாய்
பழம்பெருமை     பக்குவமாய்           மீட்டிடுவாய்
பூவுலகில்             நம் புகழை             நாட்டிடுவாய்பொய்யாது    நீயும்          பொழிவாய்    அன்பை
செய்யாது     நீயும்          மறவாய்       தின்மை
சொல்லாது   நீயும்          செய்வாய்     நன்மை
கல்லாது      நீயும்          தவிர்ப்பாய்   பொய்மை
நில்லாது      நீயும்          விலகுவாய்   கயமை
வையாது      நீயும்          வாழ்த்தாய்    உயிரை
மறவாது       நீயும்          ஈவாய்         கருணை
தவறாது       நீயும்          கொள்வாய்   மேன்மை
வாழ்வாங்கு   நீயும்          வாழ்வாய்      இம்மை
சூழாது        நின்னை      சூதும்        வாதும்வற்றாது வர்ஷிப்பாய் வருணனது தங்கையாய்
வழுவாது வடிவேலன் வாக்கெதுவும் சத்தியமாய்
                                                                                       பேத்தியை வாழ்த்திப் பாடியது

Wednesday, 20 April 2011


... பொறையின் உருவே !  பூமித்தாயே !! ...

கோடி கோடி ஆண்டுகள்
ஓடி ஓடி உருண்டன
நாடி நாடி நாங்களும்
தேடித் தேடி வந்தோமே


ஓரிருவராய் இருந்தோம் அன்று
ஆறுநூறுகோடியை மிகுந்தோம் இன்று
இருந்தும் எங்களைச் சுமக்கின்றாய்
இன்றும்  தொடர்ந்து சுழல்கின்றாய்


தாங்கி நிற்கிறாய் எங்களை
ஏங்கிப் பார்க்கிறாய் உன்னையே
தங்கிப் போகும் நாங்களோ
இங்கி ருக்கவே முயலுகிறோம்


தோண்டித் தோண்டிப் பார்த்தோமே
மீண்டும் மீண்டும் சுரந்தாயே
குடைந்து உன்னுள் சென்றோமே
குபேர செல்வங்கள் கொடுத்தாயே


கீறிய மேனியில் விளைத்தோமே
சீரிய பலனைக் கொடுத்தாயே
பூவாய்க் காயாய்க் கனியாய்ப்
பூண்டாய் தருவொடு நிழலாய்


காடு மலை நீக்கியே
வீடு வாசல் கட்டியே
ஓடு மாற்றைத் தடுக்கியே
கேடு செய்தோமுன் மேனியை


வீசு காற்றை நாளுமே
மாசு படுத்தி நலிந்தோமே
தூசு துப்பு குவித்தோமே
ஆசு ஆக்கி அழித்தோமே


ஆயுள் முழுதும் சுமக்கிறாய்
ஆயினும் நாங்கள் மறக்கிறோம்
ஆவன செய்யத் தவிர்க்கிறோம்
ஆதலின் நீயும் வெறுக்கிறாய்


அருமை அறிந்தோம் இல்லையே
பொறுமை நீயும் இழந்தனையே
ஊழிக் காலமது வருமுன்னே
ஆழிப் பேரலையைக் காட்டுகிறாய்


பூமித்தாயே! பொறையின் உருவே!!
சாமியும்  நீயே, சத்தியம் நீயே
காமி நீயே கடைக்கண் அருளே
யாமிங்கு  திருந்தி வாழ்ந்திடவே


சுற்றுச்சூழல் இனிக் காத்திடுவோம்
சுற்றிப் பசுமையை நிறைத்திடுவோம்
விண் முட்ட மரம் வளர்ப்போம்
மண் தழைக்க மழை பெறுவோம்


வெப்பம் குறைத்து நீ குளிர்ந்திடுவாய் 
தட்பம் நிறைத்து நீ மிளிர்ந்திடுவாய்
இளமையொடு நின்வளமை நிலைத்திடவே
இனியே மானுடம்தான் உழைத்திடுமேபூமி வாழ  நாம் வாழுவோமே பூமிதினம் கொண்டாடுவோமே 
        
To view my previous poems in Tamil, go to Archives ( right side of this page )