எனது மின்னூல்கள்

Wednesday 20 April 2011


... பொறையின் உருவே !  பூமித்தாயே !! ...

கோடி கோடி ஆண்டுகள்
ஓடி ஓடி உருண்டன
நாடி நாடி நாங்களும்
தேடித் தேடி வந்தோமே


ஓரிருவராய் இருந்தோம் அன்று
ஆறுநூறுகோடியை மிகுந்தோம் இன்று
இருந்தும் எங்களைச் சுமக்கின்றாய்
இன்றும்  தொடர்ந்து சுழல்கின்றாய்


தாங்கி நிற்கிறாய் எங்களை
ஏங்கிப் பார்க்கிறாய் உன்னையே
தங்கிப் போகும் நாங்களோ
இங்கி ருக்கவே முயலுகிறோம்


தோண்டித் தோண்டிப் பார்த்தோமே
மீண்டும் மீண்டும் சுரந்தாயே
குடைந்து உன்னுள் சென்றோமே
குபேர செல்வங்கள் கொடுத்தாயே


கீறிய மேனியில் விளைத்தோமே
சீரிய பலனைக் கொடுத்தாயே
பூவாய்க் காயாய்க் கனியாய்ப்
பூண்டாய் தருவொடு நிழலாய்


காடு மலை நீக்கியே
வீடு வாசல் கட்டியே
ஓடு மாற்றைத் தடுக்கியே
கேடு செய்தோமுன் மேனியை


வீசு காற்றை நாளுமே
மாசு படுத்தி நலிந்தோமே
தூசு துப்பு குவித்தோமே
ஆசு ஆக்கி அழித்தோமே


ஆயுள் முழுதும் சுமக்கிறாய்
ஆயினும் நாங்கள் மறக்கிறோம்
ஆவன செய்யத் தவிர்க்கிறோம்
ஆதலின் நீயும் வெறுக்கிறாய்


அருமை அறிந்தோம் இல்லையே
பொறுமை நீயும் இழந்தனையே
ஊழிக் காலமது வருமுன்னே
ஆழிப் பேரலையைக் காட்டுகிறாய்


பூமித்தாயே! பொறையின் உருவே!!
சாமியும்  நீயே, சத்தியம் நீயே
காமி நீயே கடைக்கண் அருளே
யாமிங்கு  திருந்தி வாழ்ந்திடவே


சுற்றுச்சூழல் இனிக் காத்திடுவோம்
சுற்றிப் பசுமையை நிறைத்திடுவோம்
விண் முட்ட மரம் வளர்ப்போம்
மண் தழைக்க மழை பெறுவோம்


வெப்பம் குறைத்து நீ குளிர்ந்திடுவாய் 
தட்பம் நிறைத்து நீ மிளிர்ந்திடுவாய்
இளமையொடு நின்வளமை நிலைத்திடவே
இனியே மானுடம்தான் உழைத்திடுமே



பூமி வாழ  நாம் வாழுவோமே பூமிதினம் கொண்டாடுவோமே



 
        
To view my previous poems in Tamil, go to Archives ( right side of this page )

No comments:

Post a Comment