எனது மின்னூல்கள்

Wednesday 23 March 2011

... நலிவடையுதே நான்கு கால் மண்டபம் ...

மண்டபமாம்  மண்டபம் -  இது
மக்களாட்சி மண்டபம்
நான்கு கால் மண்டபம் -  இது
நாமிருக்கும் மண்டபம்
பாரினிலே பெரியதாம் -  இந்த
பாரதத்து மண்டபம்


பலத்தில் பெரிய தூணதுவாம் - அதற்குப்
பாராளுமன்றம் எனப் பெயராம்
அதிகாரமிக்கத்  தூணதுவாம் - அதற்கு
அரசு என்ற  பேரதுவாம்
நெளிவு சுளிவில்லா தூணதுவாம் - அதற்கு
நீதித்துறை என்னும்பெயராம்
ஊக்கம் உடைய தூணதுவாம் - அதற்கு
ஊடகம் என்றே  பேரதுவாம்


ஒன்றிற்கொன்று உறுதுணையாய் - நாட்டை
நின்று காத்திட வேண்டுமே
விரிசல் கொண்ட தூண்களால் - இன்று
விழுந்திடுமோ நம் மண்டபம்
குடுமிப்பிடி சண்டையில் - விரைந்து
குலைந்திடுமோ  மண்டபம்
நாலு தூண்களும் பேசினவே - புழுதியை
மாறி மாறி இறைத்தனவே
மன்றத்தூண்தான்  சாடியதே - அந்த
அரசுத்தூணை அசைத்திடவே
     
“தலைநகரில் விளையாட்டு - பெரும்
தலைக் குனிவாய்ப்  போனதுவே
ஆயிரமாயிரம் கோடிகளும் - எங்கோ
அவசரமாய் மறைந்தனவே
பித்தளைக்கும் தங்கவிலை - ஒரு
பித்தர்கூடத்  தருவாரோ

தொலைத் தொடர்புத் திட்டமாம் - அதில்
 தொலைந்ததுவே மக்கள் பணம்
 இலட்சம் கோடி என்றெல்லாம் - நாமும்
 இலக்கம் மறக்கும் தொகையதுவாம்


 அலைக்கற்றை விற்பனையாம் - ஆனால்
 இலைக்கட்டு விலையிலேயாம்
 கூடிக்கூடி குவித்தீரே - எங்கள்
 கோடிக்கோடி வரிப்பணத்தை ”


கேட்டு நின்ற அரசுத்தூண் -  மிகக்
கேலியாய் நகைத்ததுவே
திட்டித்தீர்த்த மன்றத்தூணைத் - தானும்
திருப்பிக் கேட்கத் துணிந்ததுவே


“ பாராளு மன்றத்தூணே - நீயும்
 பாருனையே காலக்கண்ணாடியில்
 ஆட்சி யமைக்க ஒரு விலையும்
 அதையே கவிழ்க்க ஒரு விலையும்
 அமைதி காக்க ஒரு விலையும்
 அடுத்துக் கெடுக்க ஒரு விலையும்
 கேள்வி கேட்க ஒரு விலையும்
 கேளாதிருக்க ஒரு விலையும்
 கேட்டுக் கேட்டுப் பறித்தாயே
 கேட்பதற்கு இங்கு ஆளில்லையோ



 தினந்தோறும் கூச்சல் குழப்பம் - ஆனால்
‘தினப்படி’ மட்டும் மறப்பதில்லை
ஊழலுண்டு அரசியலில்  - எனின்
ஊழலிலும் அரசியல்தானே ”


உரக்கக்கூவியது அரசுத்தூண் -ஆங்கு
உற்றுக்கேட்டது ஊடகத்தூணும்
ஊக்கம் மிகுந்த ஊடகந்தான் - உடன்
உளவு வேலை பார்க்குதாம்
தாம் துலக்கிய  துப்பைக்கொண்டு
தரகு வேலையும் செய்யுதாம்


அமைச்சர் பதவி பெறுவதற்கும்
அமைச்சர் பதவி மறுப்பதற்கும்
அதிகாரத் தரகர் உண்டாமே
ஊடகர் தரகு பேசியதை
ஊரே கேட்டு நொந்ததுவே


இலஞ்சம் கொடுத்தே இலஞ்சத்தை
இரகசியமாய்ப் படம் பிடித்ததுவே
அம்பலமாயின அவலங்கள்
அவமானமுற்றது தேசமே
வெளிச்சம் போட்டுக் காட்டிடவே
இளித்ததுவே  அந்த ஊடகத்தூணும்


 “சின்னத்தனம் செய்வோரும் - எந்தன்
சினத்திரையில் சிக்கினரே
வரிவரியாய் எழுதுவேனே - அதை
ஒலி ஒளியாய்க் காட்டுவேனே
அணிவகுத்து நிற்பீரே- நொடியில்
அணிமாறியே ஓடிடுவீரே


கூடிக்கூடிப் பிரிவீரே - என்றும்
கூடா நட்பைக் கொள்வீரே
சாடிக்கேற்ற மூடியாய் - நாட்டில்
மோடிமந்திரம் செய்வீரே
ஊடுவதும் சாடுவதும் - அடுத்துக்
கூடுவதும் குழைவதும்
ஊரை ஏய்த்துத் திருடிடவே


வகை வகையாய்  வாக்குறுதியாம் - உடன்
உறை உறையாய்  காசுபணமாம்
கையூட்டுக் கொடுத்தேதான் - வாக்கைக்
களவாடிச் செல்வீரே


வீரர்களையும் விலை பேசுவர் - அவர்தம்
விளையாட்டில் சோரம் போவர்
நாடு காக்கப் போரில் மடிவர் - அவர்க்கென
வீடு கட்டித்  தானே குடிபுகுவர்


திருடனைக் கொண்டு காவல் போடுவார் - அவரும்
திருடிமுடித்தே திரைமறைவாவார்
கொள்ளையடிக்கக் கூட்டுசேர்ப்பார் -  அதில்
குட்டுடைய சாதியே  சரணமென்பார்


களவு போனதைத் துப்பறிய - அதற்கும்
கள்வரையே  பணித்திடுவார்
எதிரி நாட்டு வியாபாரி - இங்கு
ஏலம் பெற்றுச் சென்றிடுவார்
விரித்தது வலையென விளங்காதே - அதில்
வீழ்ந்தீரே விலாங்கு மீனெனவே
முப்புறமும் தீ எனினும் - மூத்தோர்
மோனித்திருந்தே சமர்த்தராவார் ”


மூன்று தூண்களும் முட்டினவே - முடிவில்
நான்காம் தூணை நாடினவே
ஈற்றில் நிற்கும் நீதித் தூணும் - மூவர்
சோற்றில் பூசணி மறைப்பது கண்டு
மெளனம் களைந்து பேசியதின்று


சண்டை  சச்சரவைக் கேட்டதுவே - வெகுண்டு
சாட்டைச் சொற்களை  வீசியதே
சாடிச் சாடிச் சலித்ததுவே - முடிவில்
தண்டனைத் தீர்ப்பைத் தந்திடுமே
        
தேசப்பற்று நீங்கியே - இன்று
தேசப்புற்று பரவுதே
கோடி நூறு மக்களுக்கு - இன்று
குடை  பிடிக்கும் மண்டபம்
வலுவிழந்து போகுமோ - நாமும்
வாடி நிற்க வேண்டுமோ
செல்லரித்த  தூண்களை - சரியாய்ச்
செப்பனிட வேண்டுமே


நல்லவரும் வல்லவரும் - நம்மில்
படித்தவரும் பண்புடையோரும்
செயலிழந்தே ஒதுங்கிடாது -சேர்ந்தே
களை எடுக்க முனைவோமே
கடன் முடித்து வெல்வோமே     




உச்ச நீதிமன்றம்

No comments:

Post a Comment