எனது மின்னூல்கள்

Monday 21 March 2011



... ஏனிந்தச் சீற்றமோ இயற்கை அன்னைக்கு ...

கடல்மாதா தாலாட்டினாள்
பூமிமாதா சயனித்திருந்தாள்
பூமிமாதா சற்றே ஒருக்களித்தாள்
கடல்மாதா விளையாடினாளே
கரைதாண்டிய கபளீகரமாய்
சுனாமியென்றே பெயர்கொண்டு


தான் சுமந்த நாவாய்களை தரைக்குத் தள்ளியே
மண் சுமந்த மனைகளை மடியில் வாங்கினளே
விழுங்கிய மனிதத் தேனீக்களை செறிக்கவியலாதே
விரைந்தே கரைதிரும்பி உமிழ்ந்தனளே சவங்களாய்   


கப்பல்களை வீட்டுக்கூரையிலும்
கார்களை ஆழ்கடலிலும் இடம்பெயர்த்தினள்
தீவுகளும் பயந்து நகர்ந்தனவே
பூமியின் அச்சிலிருந்து விலகினவே


விழித்துப் பார்த்த பூமிமாதா
விரைந்து சுழன்றனள் தன்னைமறந்தே
பகலும் குறுக இரவும் குறுக
பயத்திலின்று மனிதகுலம் நடுங்க


இயற்கை அன்னைக்கு ஏனிந்த சீற்றமோ
செயற்கை அழிவை மானிடர் தேடுவதாலன்றோ
அணுவுலைகள் ஏற்றினீர் அதிசக்தி பெற்றிடவே
கசிந்தனவே உலைகளும் வீசினவே கதிர்களும்


செர்னோபில் உரைத்த பாடங்களைத்தான்
செகத்தினரும் செவியில் ஏற்றாரில்லையே
ஜப்பான் தருகின்ற பாடங்களையும்
தப்பாது தவிர்க்கவே முயலுகின்றாரே


வல்லரசு என்னும் திறம் போதும்
நல்லரசு என்னும் தரம் வேண்டாவென
பொல்லாக் கொள்கையைப் புவனம் பூண்டதே
எல்லா அழிவிற்கும் அச்சாரம் ஆகுதே
தாரணியில் தாமும் வல்லரசெனும்
ஓரணியில் சேரவே விழைகின்றனரே


ஊழிக்காலம் வருகுதென்பதையே
ஆழிப்பேரலையாள் உணர்த்துகிறாளோ
மீண்டும் மீண்டும் அறிவிக்கின்றாளோ
மாண்டு போகுமே மனிதகுலமென்றே


கோடிக்கரங்கள் கூடி உருவாக்கின
மூடித்திறக்கும் நொடியில் உருண்டன
பொடி நடுக்கம் பூமி செய்திடின்
மடிந்தே போகுதெம் மன்பதையே


நடுங்கியது நாணமறு நிலமடந்தை
பிடுங்கியதவர் உறவும் உடைமையும்
ஒடுங்குவதன்று உழைப்பும் உறுதியும்
வெங்கொடுமை வெல்வர் ஜப்பானியரே

No comments:

Post a Comment