எனது மின்னூல்கள்

Sunday 2 June 2013

குறள் கிளறும் சிந்தனைகள்

திருக்குறள் தமிழில் முப்பால் நெறிகூறும் மூலநூல். முன்னாள் பதின்மர் தவிர்த்து, திருக்குறள் அச்சேறிய  (1812) இந்த நூறாண்டு காலத்தில் பல அறிஞர்களும், நூலோரும் விரிவான உரைவிளக்கங்கள் தந்திருப்பதோடுஉலகின் பலமொழிகளில் மொழிவல்லுநர்களால் பெயர்க்கப்பட்டுள்ள பெருமையுடைத்துஅண்மையில் நரிக்குறவர் மொழியில் (வக்ரபோலி) பெயர்க்கப்பட்டதையும் கணக்கில் கொள்வோமாயின், இதுவரை 27 மொழிகளில்  திருக்குறள் பயில வகைசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் திருக்குறளை மொழிபெயர்த்து உரை எழுதியுள்ளனர். எண்ணற்ற கட்டுரைகளும், ஆய்வுரைகளும், பொழிவுகளும் திருக்குறள் இன்றளவும் கண்டுவருகிறது என்பது தமிழுக்கே பெருமை சேர்ப்பதாகும்.  
இவ்வாறிருக்க, கடவுள் நம்பிக்கை போன்ற சில குறள்நெறிகள் மறுக்கப்படுவதோடு, திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" எனும் அதிகாரமே இடைச்செருகல் என்று வாதிடுவாரும் உளர். சமயம், மற்றும் கடவுள் சார்ந்த ஆன்மிகக் கருத்துகள் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களிடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் நிலவிவருவதாம். அவற்றை மறுப்பாரும், எதிர்ப்பாரும் அற்றை நாளிலிருந்தே உண்டு என்பதும் வரலாறு. ஆயினும், வள்ளுவர் வாய்மொழிக்குத்  தவறாகப் பொருளுரைக்கும் / பொருள்கொள்ளும்  தீமைக்கு ஆளாகலாகாது என்பதும் இற்றை நாளில் நாம் உணரவேண்டிய ஒன்றாம்.
 இக்கால உரையாசிரியர்களில் சிலர் முற்றிலும் புதுமையான முறையில் விளக்கங்கள் தருவதோடு, ஆய்வாளர்கள்கூட திருக்குறளைப் புதுமைப் பார்வைகொண்டு கருத்துருக்களைத் தர முற்பட்டுள்ளனர். மிகச்சில குறள்நெறிகள் இக்கால விழுமியங்களுக்கு முரண்பாடாய்த் தோன்றுவதாக வாதிடுவோரும் உண்டு. அவர்களது கூற்றையும் கூர்ந்து கேட்டு விளக்கமளிப்பது இன்றையத் தேவையெனலாம்.
திருக்குறள் வாழ்வியல் நெறிகளை எளிமையும், இனிமையும் நிறைந்த மொழியில், படிப்போர் உள்ளத்தே பசுமரத்தாணிபோல் பதியும் வண்ணம் மிகக் குறுகிய வடிவிலமைந்த குறள் வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.    நூல்களிலும்,

பொழிவுகளிலும் குறட்கருத்துகள் சரளமாக மேற்கோள் காட்டப்படுவதையும் காணலாம். ஆயினும், இலக்கிய வட்டத்திற்கும் அப்பால்இன்று பல்லூடகத் தாக்கங்களுக்குப்   பெரிதும் உள்ளாகியிருக்கும் சாதாரண மக்கள் மற்றும் பாமர மக்களிடையும் பெருவாரியாகச் சென்றடைய வேண்டியது இக்காலக் கட்டாயம் எனலாம்.
இவ்வகையில் அமையுமாறு மூன்று கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்போர், கால ஓட்டத்தில் நாளும் மாறிவரும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும்கூட திருக்குறள் எவ்வாறெல்லாம் பொருந்தி வரலாம் அல்லது சிற்சில இடங்களில் மாற்றத்திற்குள்ளாகலாம் என்பதை நடுவுநிலைமையோடு ஆழ்ந்து சிந்தித்துப் பயனுற வேண்டுமென்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த குறிக்கோள். இதைத் தவிர்த்து, திருக்குறளுக்குப் புதிதாய்ப் பெருமை சேர்க்க வேண்டியதொன்றில்லை.

இம்மூன்று கட்டுரைகளையும்  எனது இணைய தளத்தில் பார்க்கவும்(sabavadivelu.com)

  வள்ளுவம் தெளிவோம்  !  வாழ்வில் உயர்வோம்  !!

                                           
                                                                                சபா வடிவேலு