எனது மின்னூல்கள்

Thursday, 1 September 2016
கடிதம் எனும்  தூது
                                                           
கார்மேகம் வான வீதியில் ஊர்வலம் கண்டதும்
இடி முழக்கி மின்னல் வெட்டி மிரட்டியதுவும்
அம்மாவைக் கட்டியே அர்ச்சுனா என்றதுவும்
மழையெனும் மாயம் மறுபடியும் நிகழ்ந்ததுவும்
குளம் குட்டையெல்லாம் நிறைந்து தளும்பியதுவும்
குஞ்சு மீன்கள் ஆங்கே உயிர்த்து  விளையாடியதுவும்
கூட்டங் கூட்டமாய்க் கொக்குகள் குவிந்ததுவும்
குள்ளப் பசுவதுவும் கொட்டிலில் ஈன்றதுவும்
கொல்லையில் ரோசா பூத்துச் சிரித்ததுவும்
குலை தள்ளிய வாழையை வியந்து மகிழ்ந்ததுவும்
கோயில் கொடியேறி கொண்டாட்டம் துவங்கியதுவும்
ஒன்று விடாது உரைக்கும் மடலதுவாம்
நன்று நம்மிடைப் பழகிய மரபதுவாம்
இன்று கடிதக் கலையதுவும் கரைந்து மறைந்ததுவே
குறுஞ் செய்தி மின்னஞ்சல் குறுக்கினவோ
குழுக்கள் கூட்டும்  இணையந்தான்  விரட்டியதோ
விரைந்து செல்லும் இளையோர்காள் கேளீர் !
கலை நயமாம் மடல் பல வரைதல்
கடுகுச் செய்தியும் களிப்பை யூட்டும்
கற்பனை ஊறியே உள்ளம் உவக்கும்
கைவிடாதீர் கவின் தமிழில் கடிதம் வரைதல் !
                           
                             ( உலக கடிதம் எழுதும் தினம் – செப்டெம்பர் 1)