எனது மின்னூல்கள்

Tuesday 17 May 2011

மறுபடியும் மணந்தேன் என் மனையாளை .....

அகவை அறுபது யானடையுங் காலை
இகமுள இன்பமும் துன்பமுமான அனுபவப் பதிவுகளை
மகன்களுக்கும் மருகியர்க்கும் மனம்திறந்தே பகிர்ந்தோமே
தகவுரையும் தந்தோமே தரணியிலவர் சிறக்கவே

மாமிக்கும் மாமனுக்கும் மறுபடியும் கல்யாணமாம்
மணவிழா மாண்புற முனைவதுவோ மணாட்டுப்பெண்களாம்
தாய்க்கும் தந்தைக்கும் மணிவிழா காண்பதுவாம்
சேய்களுடன் புத்திரர்கள் சூழநின்று உவப்பதுவாம்

மருமக்கள் குதூகலிக்கும் அறுபதாம் கல்யாணமாம்
மகன்கள் பார்த்துவக்கும் பெற்றோரின் கல்யாணமாம்
பேத்தியும் பேரனும் பேசப்போகும் கல்யாணமாம்
சம்பந்தியர் கொடையுடன் சம்பிரதாயக் கல்யாணமாம்

கடைக்கண் பார்வையில் பதினாறும் தருபவளாம்
கடையூரில் சென்றவள் பொற்பாதம் பணிந்திடலாம்
காலசம்கார மூர்த்தியை முன்னிலை வைத்திடலாம்
கல்யாணம்தான் கட்டலாமெனக் கட்டியந்தான் கூறினரே

ஆவணித் திங்கள் இருபத்தோராம் நாளதுவாம்
அவனியில் நான்பிறந்து ஆண்டறுபது முடிவுறுமாம்
சிவனிடம் மார்கண்டன் சீர்பெற்ற தலமதுவாம்
இவரிருவர் மறுபடியும் மணம்புரிய ஏற்றதுவாம்

தலைமைதனை ஏற்றதுவோ ஆரணங்கு அனிதாவாம்
இலையொரு குறையே என்பதொன்றே குறையதுவாம்
இளையோரும் இளைத்தாரில்லை இச்சகமோ இதுவல்லவாம்
களைகட்டல் கண்டீர் கண்மணிகாள் கல்யாணவைபோகமாம்

உல்லாச ஊர்தியிலே உவப்புடனே புறப்பட்டோம்
இல்லாளும் நானும் எண்மரோடு மழலையர்
இனியவரிருவரும் கடையூர்தான் சென்றடைந்தோம்
இனித்தமுடன் வைபவத்தை எளிமையாய் நடத்திடவே

மந்திரசாத்திர சம்பிரதாயச் சடங்குகள் நிறைந்திட
சுந்தரத் தமிழினில் அர்ச்சகர் பொருளுரைத்திட
அந்தணர் இருவரும் மணவினைகள் நிகழ்த்திட
வந்தவர்க்கு விளங்கிட விழைந்துகூடி வாழ்த்தினரே

காலனைக் காலிலிருத்திக் கறைகண்டன் அருள்சுரக்க
வேலவன் பெயர்கொண்டோன் மணவறை வீற்றிருக்க
வலனமர்ந்தவள் நாணுடன் மங்கல நாணேற்க
இலங்கினாளென்னவள் அட்சதை என்னுடன் அவள்பெறவே

எந்தன் பிள்ளைகள் மருமக்கள் பேத்திபேரனுடன்
வந்தெம் முன்வீழ்ந்து வணங்கி எழுந்தனரே
தந்தோம் மனம்முதிர்ந்த ஆசிகள் தக்காரவரெனவே
பந்தம் பாகாய்க் கசிந்துருக நன்றியுரைப்போம் நாங்களிவர்க்கே

எந்தன் மனையறம் என்றும் வளர்ந்திடவே
தந்ததென் மனையாள் மனோகர மனோரதமே
பந்தமெனப் பயக்கவே பப்பாதியானவள் மீதே
பந்தனந்தாதிஅன்ன பாடிடத்தான் துணிவேன் யானும்


இத்துணை நாளும் நான்பெற்ற இத்துணையை
எத்துணை நாளாகிலும் காத்திடுவேன் இணையாய்
அத்துணை நாளும் வாழ்ந்திடுவோம்உறுதுணையாய்
அரிதுணை நாடியே அடைந்திடுவோம் அடியிணையை

மறுபடியும் மணந்தேனென் உடனுறை மனையாளை
மறுபடிமறுபடி பிறப்பினும் இணைபிரியோமே இவ்வுலகில்
உறுதுணையில் பதிசதியாய் சதிபதியாய் மாறிடுவோமே
இறுதிவரை இவ்விதமே இணக்கமுடன் இணரோங்கிடுவோமே

வாழ்க எம்மக்கள் தத்தம் மனைவிமக்களுடனேயே
வாழ்க எம்சுற்றமும் நட்பும் நலம்பல நிறைந்திடவே
வாழ்க எம் மனிதவினம் பல்லுயிரோடிணங்கியே
வாழ்க வாழ்கவே இப்பூவுலகம் முழுமையுமே
 

No comments:

Post a Comment