எனது மின்னூல்கள்

Tuesday 17 May 2011

நூல் பல கற்க

தம்பிகளே ! தங்கைகளே !



தகவல் ஒன்று கேளுங்களேன்



நாளும் பள்ளி சென்றிடுவீர்



நன்கு பாடம் கற்றிடுவீர்



நினைவில் நிறுத்தப் பழகிடுவீர்


தேர்வில் தேர்ச்சிப் பெற்றிடுவீர்

அவை மட்டும் போதா கண்மணிகாள்

அறிவை நாளும் வளர்த்திடனுமே

அதற்கு வழியென்ன கேட்பீராயின் 

அறிஞர் சொல்வர் “ நூல் பல கற்க ”

கதைகள் கவிதைகள் கட்டுரைகளாம்

கணிதம் அறிவியல் அரசியலாம்

பொருளியல் புவியியல் பொதுஅறிவாம்

சரித்திரம் சமயம் தத்துவமாம்

எத்துணை எத்துணை நூல் வகையாம்

எல்லாம் நீங்கள் சுவைத்திடலாம்

நூல்கள் பலவும் படித்திடுவீர்

நுண்ணிய அறிவைப் பெற்றிடுவீர்

விலைக்கு வாங்கியும் படித்திடலாம்

நூலகம் சென்றும் படித்திடலாம்

நூல்கள் கற்று முடித்திடுவீர் 

நூல்கள் இயற்றக் கற்றிடுவீர்

படித்தது போலவே நடந்திடுவீர்

பாரினில் நம்புகழ் பரப்பிடுவீர்

                                                                    ( உலக புத்தக தினம் - ஏப்ரல் 23 )         
.... என் சொல்லித் துதிப்பேனோ ....

சக்தியே பராசக்தியே ஆதி பராசக்தியே !
மா சக்தியே மண்ணுயிர்க் கெல்லாம் மாதாவே
தீப்பிழம்பின் ஒளியும் நீயே
ஊழிக்காற்றின் நர்த்தனமும் நீயே
ஆழிவெள்ள ஆர்ப்பரிப்பும் நீயே
முடிவற்ற வெளியும் நீயே
முடிவுறும் மண்ணும் நீயே
அண்டபகிரண்டங்களையும் படைத்தாளுவது நீயே
அறிவதும் நீயே அறியப்படுவதும் நீயே
நானுணரும் பொருளனைத்தும் நீ படைத்தவையே
நின் படைப்பையே உவமையாக்கி போற்றல் தகுமோ
மா சக்தியே உனை என் சொல்லி வாழ்த்துவேனோ
சொல்லெனக்கு நீயே !
சொல்லும் நீயே , பொருளும் நீயே
சொல்லின் ஒலியும் μசையும் இசையும் நீயே
இயற்கை நீயே , இயற்றலும் நீயே
இயல்பாய் காப்பாய் உயிரனைத்தையும் நீயே
அன்னை பராசக்தி போற்றி போற்றி !!
மறுபடியும் மணந்தேன் என் மனையாளை .....

அகவை அறுபது யானடையுங் காலை
இகமுள இன்பமும் துன்பமுமான அனுபவப் பதிவுகளை
மகன்களுக்கும் மருகியர்க்கும் மனம்திறந்தே பகிர்ந்தோமே
தகவுரையும் தந்தோமே தரணியிலவர் சிறக்கவே

மாமிக்கும் மாமனுக்கும் மறுபடியும் கல்யாணமாம்
மணவிழா மாண்புற முனைவதுவோ மணாட்டுப்பெண்களாம்
தாய்க்கும் தந்தைக்கும் மணிவிழா காண்பதுவாம்
சேய்களுடன் புத்திரர்கள் சூழநின்று உவப்பதுவாம்

மருமக்கள் குதூகலிக்கும் அறுபதாம் கல்யாணமாம்
மகன்கள் பார்த்துவக்கும் பெற்றோரின் கல்யாணமாம்
பேத்தியும் பேரனும் பேசப்போகும் கல்யாணமாம்
சம்பந்தியர் கொடையுடன் சம்பிரதாயக் கல்யாணமாம்

கடைக்கண் பார்வையில் பதினாறும் தருபவளாம்
கடையூரில் சென்றவள் பொற்பாதம் பணிந்திடலாம்
காலசம்கார மூர்த்தியை முன்னிலை வைத்திடலாம்
கல்யாணம்தான் கட்டலாமெனக் கட்டியந்தான் கூறினரே

ஆவணித் திங்கள் இருபத்தோராம் நாளதுவாம்
அவனியில் நான்பிறந்து ஆண்டறுபது முடிவுறுமாம்
சிவனிடம் மார்கண்டன் சீர்பெற்ற தலமதுவாம்
இவரிருவர் மறுபடியும் மணம்புரிய ஏற்றதுவாம்

தலைமைதனை ஏற்றதுவோ ஆரணங்கு அனிதாவாம்
இலையொரு குறையே என்பதொன்றே குறையதுவாம்
இளையோரும் இளைத்தாரில்லை இச்சகமோ இதுவல்லவாம்
களைகட்டல் கண்டீர் கண்மணிகாள் கல்யாணவைபோகமாம்

உல்லாச ஊர்தியிலே உவப்புடனே புறப்பட்டோம்
இல்லாளும் நானும் எண்மரோடு மழலையர்
இனியவரிருவரும் கடையூர்தான் சென்றடைந்தோம்
இனித்தமுடன் வைபவத்தை எளிமையாய் நடத்திடவே

மந்திரசாத்திர சம்பிரதாயச் சடங்குகள் நிறைந்திட
சுந்தரத் தமிழினில் அர்ச்சகர் பொருளுரைத்திட
அந்தணர் இருவரும் மணவினைகள் நிகழ்த்திட
வந்தவர்க்கு விளங்கிட விழைந்துகூடி வாழ்த்தினரே

காலனைக் காலிலிருத்திக் கறைகண்டன் அருள்சுரக்க
வேலவன் பெயர்கொண்டோன் மணவறை வீற்றிருக்க
வலனமர்ந்தவள் நாணுடன் மங்கல நாணேற்க
இலங்கினாளென்னவள் அட்சதை என்னுடன் அவள்பெறவே

எந்தன் பிள்ளைகள் மருமக்கள் பேத்திபேரனுடன்
வந்தெம் முன்வீழ்ந்து வணங்கி எழுந்தனரே
தந்தோம் மனம்முதிர்ந்த ஆசிகள் தக்காரவரெனவே
பந்தம் பாகாய்க் கசிந்துருக நன்றியுரைப்போம் நாங்களிவர்க்கே

எந்தன் மனையறம் என்றும் வளர்ந்திடவே
தந்ததென் மனையாள் மனோகர மனோரதமே
பந்தமெனப் பயக்கவே பப்பாதியானவள் மீதே
பந்தனந்தாதிஅன்ன பாடிடத்தான் துணிவேன் யானும்


இத்துணை நாளும் நான்பெற்ற இத்துணையை
எத்துணை நாளாகிலும் காத்திடுவேன் இணையாய்
அத்துணை நாளும் வாழ்ந்திடுவோம்உறுதுணையாய்
அரிதுணை நாடியே அடைந்திடுவோம் அடியிணையை

மறுபடியும் மணந்தேனென் உடனுறை மனையாளை
மறுபடிமறுபடி பிறப்பினும் இணைபிரியோமே இவ்வுலகில்
உறுதுணையில் பதிசதியாய் சதிபதியாய் மாறிடுவோமே
இறுதிவரை இவ்விதமே இணக்கமுடன் இணரோங்கிடுவோமே

வாழ்க எம்மக்கள் தத்தம் மனைவிமக்களுடனேயே
வாழ்க எம்சுற்றமும் நட்பும் நலம்பல நிறைந்திடவே
வாழ்க எம் மனிதவினம் பல்லுயிரோடிணங்கியே
வாழ்க வாழ்கவே இப்பூவுலகம் முழுமையுமே
 
.... இருவருமாய் இறைஞ்சிடுவோமே ....


இருமுதுகுரவர் இணையடி போற்றி

இருமரபுணர்ந்து இயல்பாய் வளர்த்து

இருபொருளதனை இருவரும் இயற்றி

இருமருந்ததனை இருந்திட ஏற்று

இருசுடரதனை இயங்கிடத் துதித்து

இருடிகளவரை இதயத்தில் பதித்து

இருவகையறமும் இம்மையில் துய்த்து

இருமையிலும் இருவராய் இருந்திட

இருபோதும் இறைவனை இறைஞ்சிடுவோம்


அறிக
 

இருமுதுகுரவர் --------- தாயும், தந்தையும்
இருமரபு ---------- தாய்வழி, தந்தைவழி வந்த மரபுகள்
இருபொருள் ---------- கல்வியும், செல்வமும்
இருமருந்து ---------- உணவும், நீரும்
இருசுடர் ---------- சூரியனும், சந்திரனும்
இருடிகள் ----------- பதினொரு முனிவர்கள்
(வசிட்டர் தொடங்கி துருவாசர் ஈறாக)
இருவகையறம் ------- இல்லறமும், துறவறமும்
இருமை ---------- இம்மையும், மறுமையும்
இருபோது ----------- காலையும், மாலையும்
 

Sunday 1 May 2011


.... களப்பலி ....

ஆண்டுகள் ஐந்து ஆனால் போதும்   

ஆண்டிட அனைவரும் அண்டி வருவர்
குடியரசு சமைத்திட வேண்டுமென்பர்
குடியர் அரசாய் குலைத்திடுவர்
மக்களாட்சி மலர்ந்தது என்பரவர்தம்
மக்கள் ஆட்சி மகுடமேற்பர்

வாக்குக்கேட்டு வணங்கி வருவர்
வகைவகையாய் வாக்குறுதி அளிப்பர்
மாவரைக்கும் எந்திரமுண்டு
மடிக்கணினி தானுமுண்டு
தலைக்கொரு தொகையுமுண்டு
தவறாது வாக்கு வேண்டும்

அவரவர் அட்டைக்கு அரிசி உண்டு
அஞ்சறைப் பெட்டிக்கு மளிகை உண்டு
இளைப்பார மின் விசிறி உண்டு
இனிய பொழுதிற்கு வண்ணத்தொலைக்காட்சி
இவையனைத்தும் இலவசமே
இன்னுமுண்டு வாக்களித்தால்

ஐய உந்தன் வாக்குதான் அதிவிலைக்கு விற்பீரோ
பைய பைய வாங்கிடுவீர் மீதமுள்ள தேவைக்கு
வைய வைய தந்திடுவோம் தானமாக இன்னுமே
ஈய ஈய ஏற்பீரோ இளிச்சவாயர் ஆவீரோ

அப்பாவி கையில் வாக்கு
தப்பாது விலையாகும் போக்கு
எப்போது புரியும் இவர்க்கு
அப்போது அவர்க்கு சுருக்கு

குடி வாழக் கோன் வாழ்ந்தான் அன்று
குடி கொடுத்து குடி கெடுப்பார் இன்று
சொல்வதெல்லாம் இவர் செய்வதுண்டு
செய்வதெல்லாம் நமக்குச் சொல்வதுண்டோ

வறியவர் வாழ்ந்திட வேண்டுமெனில்
வளம் தரும் வேலை தந்திடனும்
பொருளது ஈட்டிட வேணுமாயின்
பொருள் தரும் பிச்சை தவிர்த்திடனும்

நன்மை செய்வோர் திறனறிந்து
தேர்தல் செய்து தருவீரே
நாட்டை ஆளச் செய்வீரே
சேட்டை செய்யத் தொடங்கினால்
கோட்டையில் இருந்து குடிசைக்கு
பாட்டை போட்டுக் கொடுப்பீரே
 
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் களத்தில் பலியாவது வாக்காளரே