எனது மின்னூல்கள்

Saturday 24 February 2018

முச்சந்தி முரசு - 5



     நாட்டுக்குள் நரிகளாம்:

     மலரென எழுதுமென்றாரே
     மக்களும் முன்வந்தாரே
     மடியைத்தான் பறித்தாரே !

   
     எழுதுகோல் மாயக்கோல் என்பர்
     எழுதுகோல் எழுதினால் மட்டுமோ
     எழுதுகோல் செய்தாரும் மாயமே !

Thursday 22 February 2018

முச்சந்தி முரசு - 4



   அரசியல் புதுவரவுகள்

   எவரும் வரலாம்
   எதையும் தரலாம்
   என்றும் நமதாம்!

Tuesday 20 February 2018

முச்சந்தி முரசு - 3




வேலியும் ஓணானும்


நரிகள் தேடியதோ கூட்டாளி
நாட்டுக்குள் சிக்கியதோ காவலாளி
நட்புக்கு இலக்கணமாம் விருந்தாளி

புதரின் மறைபொருள்:

     1.     நரிகள் - தந்திரம் நிறைந்த சமூக விரோதிகள்
     2.     நாடு     -  சட்டப் பரிபாலனத்திற்கு உட்பட்ட சமூக வெளி
     3.     காவலாளி – சட்டம், ஒழுங்கை காக்கும் மக்களின் நண்பர்
     4.     விருந்தாளி – திருடன் வீட்டு விருந்தில் விரும்பி உண்டு, ஊட்டி,                                                       உறவாடுபவர்


Friday 16 February 2018

முச்சந்தி முரசு - 2



புற்றுதோறும் பாம்பு
புலம்புவதோ எறும்பு
புகாரில் சிக்குவது பிடாரன் கம்பு!

புதிர் சாவி:
1. புற்று  – பல்லோர் சேமிப்பை, வணிக வாய்க்காலில் பாய்ச்சி வளம்                           பெருக்கும் வங்கி எனும் கட்டமைப்பு
2. எறும்பு – சிறுகச் சிறுக பன்னாளில் சேமித்து பாதுகாப்பிற்கென வங்கியில்           வைக்கும் வாடிக்கையாளர்
3. பாம்பு – பலத்தைக் காட்டிப் புற்றை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும்                              பெருங்கடன்தாரர்கள்
4. பிடாரன் – கண்ணிமையாது கண்காணிக்க உருவான நெறிமுறைகள்

5. கம்பு    -  தூங்கியே கோட்டைவிடும் துப்புக்கெட்ட தணிக்கை

Wednesday 14 February 2018

காதலர் தினம்





காதல் செய்வீர் மானிடரே!

கனவிலும் மறவாக் காதலியை
கண்ணினும் மேலாம் கண்ணாட்டியை
கடிந்தும் அன்பூறும் பிள்ளைகளை
கடைவரை குற்றம் பொறுக்கும் பெற்றோரை
கரவாது உறவாடும் உடன்பிறப்புகளை
கலந்து மகிழ்ந்திடும் நல் உற்றாரை
கலங்கும்காலை கைகொடுக்கும் நட்டாரை
கணமும் துறக்கவொண்ணாத் தாய்நாட்டை
கற்கச் சிறந்த நம் தாய்மொழியை
கடனெனக் காப்பதே களிப்பேருவகை
ஆதலினால் ,
காதல் செய்வீர் மானிடரே!
கடுஞ்சினம் துறந்து கடும்பகை மறந்து
கடலெனக் காதல் கொள்வீர் ஆருயிர்மீதெலாம்!                                                                                                                                                                                                                                                                                                  (காதலர் தினம் – பிப்ரவரி 14)

Saturday 10 February 2018

முச்சந்தி முரசு -1




                                                                   நாட்டு நடப்புகளை நாள்தோறும் நாம்  படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். அவற்றுள் சில நிகழ்வுகள் மட்டும் மனத்தைப் பாதிக்கின்றன, அல்லவா?   சில நிகழ்வுகள் நெஞ்சை உலுக்குகின்றன, சில நெஞ்சை நெகிழ வைக்கின்றன, வேறு சில விரக்திகொள்ளச் செய்கின்றன, மற்றும் சில சினத்தைச் சிந்தையில் தகிக்க வைக்கின்றன.

அவற்றைப் பற்றி உடனுக்குடன் மனத்தில் தோன்றுவதை அவ்வப்போழ்தே பகடியாய்ப் பதிக்க விழைவதன் விளைவாய் இப்பதிவுகள் வருகின்றன. சிரித்துக்கொண்டே திட்டுவதைப்போல், புன்னகைத்தே ஏளனம் செய்வதைப்போல் எழுதினாலோ, பேசினாலோ மனச்சுமை குறைவதை உணரலாம். படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் அதே நிலை ஏற்படும் என நம்புகிறேன். மேலும் விமரிசனத்திற்கு உள்ளாகும் நபர்கூட தன்னைக் கிண்டல் செய்திருப்பதைப் படித்தால் சினம் கொள்ளாது சிந்திப்பார் என நம்பலாம். 

நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை கேட்டுவிடவேண்டும் என்று கோப வயப்படும்போது, அதையே சற்று மடைமாற்றி கேலியும் கிண்டலும் செய்தாலென்ன? எள்ளலும், ஏளனமும், நக்கலும், நையாண்டியும், குத்தலும், பரிகசித்தலும் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைப்பனவாம். எனவே, இதையும் ஓர் இலக்கியச் சுவையுடன் கூடிய சமுதாயப் பணியென்றே கொள்வோமாக. இத்தகு விகடம் கேலிச் சித்திரம் போன்றதே. இந்த வகையில் பாரதி நமக்கெல்லாம் முன்னோடி ஆவார்; காந்தியையும் தம் எழுத்தில் கேலியாய்ச் சாடியவர் அன்றோ?

தவறையும் குற்றத்தையும் தூற்றுவதே யன்றி அவதூறு கிளப்புவது நம் நோக்கம் அன்று. அறச்சீற்றத்தினை ஆற்றுப்படுத்த இது ஓர் சிறு முயற்சி. யார் மனத்தையும் புண்படுத்துவதன்று நம் நோக்கம்; ஊடகச் செய்திகளை அறியாவிடின், இப்பதிவுகளும் விளங்கா. எனவே, நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி வாசிக்கவும்.


அகந்தையின் அத்துமீறல்

அனைவரும் தூற்றுவரே
அர்ச்சகர் கைவண்ணம்
அம்மனும் அழகாமோ சுடிதாரில்


அதிவிரைவு ஆபத்து

விழைந்தால் சேர்வு
வெறுத்தால் முறிவு
நொடியில் தீர்வு

நாட்டுப் புறத்துப் பஞ்சாயத்து
நாட்டாமை மீதின்று பிராது
நானாவித சொம்புகள் சிலும்பின காண்!

சிறிய சொம்புகள் சேர்ந்தன
பெரிய  சொம்பைச் சாடின
சோபிதம் இழந்து சொப்புகள் ஆயின

கூண்டில் சுகிப்பது தாய்க்கிளியாம்
குளிர் விட்டுளறுது தந்தைக் கிளியாம்
குட்டிக் கரணம் அடிப்பதோ இளங்கிளிகளாம்


பொம்மலாட்டம் :

இரண்டு பொம்மைகள் ஆடுதாம்
இடையிடையே அவை விலகுதாம்
இருட்டில் சமரசம் கிட்டுதாம்
மாயக் கயிறு ஆட்டுதாம்


 சகல கலா வரி:

அப்பா தந்தார் அப்படியே சம்பளத்தை
அம்மா போட்டாள் அம்மாதக் கணக்கை
அரசு புகுந்து அள்ளிச் செல்லுதே


2018 சந்திர கிரகணம்   
( 152 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு)

சாய்கதிர் முத்தாடி சிவந்தனையோ
சந்தியில் மயங்கி நீலம் பாரித்தனையோ
சடுதியில் மறைந்து சல்லாபித்தனையோ
சாந்தியில் பூரித்துப் பருத்தனையோ


பக்தியும் பழிப்பும்

ஆண்டாளைப் பழித்தால்
அடியவர்க்கு கோபம்
ஆத்திரத்தில் பறக்குதே புட்டிகள்

பாவம் ஆண்டாள்
பழித்தவரை விஞ்சியதே
பக்தர்கள் பழிப்பு!