எனது மின்னூல்கள்

Saturday, 5 September 2015

MY BOOK

                  

                 வீழ்க சாதி சமயம்!  வெல்க மனித நேயம்!  
                                                 (எனது    கவிதைநூல் )   
       
       எண்ணங்களின் இசைப்பே கவிதைகளாம். சிந்தனைக் கருவை வளர்த்தெடுத்து,  எழிலுருவம் பெற்றிடத் துணைநிற்பவையே கவி தொடுக்கும் சொற்களாம்.  சக்தி தரும் உணவிற்குச் சுவையூட்டுதல் போன்றதே கவிதை வடிவம் . இலக்கணம் கடந்து, இன்னோசை  தேர்ந்து, எளிமையுடன் வடிக்கப் பெறுவதே மரபுசாராக் கவிதையெனலாம். வரிகளை ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிதை.  கேட்பவர் விழைந்து கேட்கும்வண்ணம்   பழகு தமிழில் பாங்குறச் சொல்லும் திறனே புதுக்கவிதை. யாப்புச் சுதந்திரம் கவிதையை எண்ணற்றவர்களிடம் எடுத்துச்செல்ல உதவுகிறது. பண்டிதர்களுக்கும் அப்பால் கவிதாரசனை  இருப்பது கணக்கில் கொள்ளப்படுகிறது.
  கருத்துவானில் கடிவாளமின்றி கற்பனைத்தேரில் சொல்லேருழவர்கள் பவனி வருவர். எத்துணை எத்துணைக் கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் கைபேசித் தளங்களிலும் இணையங்களிலும் மின்னூல்களிலும் மின்னூலகங்களிலும் எனப் பல்லூடகங்களிலும் உலகளாவிய தமிழ் வாசிப்புகள் பரந்து பட்டுள்ளன ! புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சொல்லோவியங்களாய், கலைச் சிற்பங்களாய் நாளும் உயிர்க்கின்றன! வளர் தமிழின் புதுப்புதுப் பரிமாணங்கள் வைகலும் வளர்த்தெடுக்கப் படுகின்றனவே !
           இச்சூழல் தந்த துணிவின் விளைவே நானும் கவிதை எழுதத் தொடங்கியது. பலபொழுதில் பல்வகைச் சூழலில் கருக்கொண்ட கருத்துகளைக் கவிதையாக்கிப் பார்த்தேன்;  நம்மைச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், மென்மையான மனித உணர்வுகளின் ஆளுமை, உறவுகளின் மென்மையும் வன்மையும், வாழ்வின் வசந்தமான இளமையும், கோடையாகிய முதுமையில் தனிமையும், பழைமையும், புதுமையும்,  ஒளிரும் பன்முக மனித ஆற்றல் எனப் பல்சுவை கொண்ட பாடல்களைத்தான் வார்த்துள்ளேன்.        
 புறநிகழ்வுகளைக் காண்பதையும் கேட்பதையும் உள்ளுவதையும் உணர்வுகளாய் வடித்துள்ளேன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வீச்சும் தாக்கமும் எளிய தமிழில் கதம்பக் கவிதைகளாய்ப் பதிவுபெற்றுள்ளன. 
  கவிதைகளை வாசியுங்கள்; என்போன்ற எளியோர்க்கும் வசமாகும் வண்டமிழை வாழ்த்துங்கள் !                           

                        
                    இன்று வெளிவந்துள்ள எனது கவிதைநூல். மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இச்சிறுநூல்  47 எளிய கவிதைகளை உள்ளடக்கியது. விலை ரூ.60

 முகவரி: 
மணிமேகலைப் பிரசுரம் 
7 தணிகாசலம் சாலை, 
தி.நகர், சென்னை 17 
தொலைபேசி: 044-24342926.  
                நண்பர்கள் இந்நூலினை வாங்கி , கவிதைகளைச் சுவைத்து, கருத்தினை வெளியிடுமாறு நட்புடன் வேண்டுகிறேன்.

Sunday, 30 August 2015

எனது கவிதைநூல்

                                                                                                                                   இன்று வெளிவந்துள்ள எனது கவிதைநூல்                                                                                                                                                                          கவிதைகள் :47                                                                                           பக்கங்கள் :100                                                                                                     விலை ; 60                                                                                                             மணிமேகலைப் பிரசுரம்                                                                                சென்னை - 17                                                                                                                                                            

Thursday, 16 April 2015

“மொழிசார் சிந்தனைகள்”


“மொழிசார் சிந்தனைகள்” – முனைவர் பொற்கோ எழுதியுள்ள இந்நூலை இன்று படித்துமுடித்தேன். பன்னிரு கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ள இச்சிறு நூல் தமிழ் ஆர்வலர்களுக்குப் பயன்தர வல்லது.
‘பாரதியின் மொழிக் கொள்கை” , “கண்ணன் பாட்டில் பாரதியின் மொழித்திறன்”, “தெருக்கூத்து மொழிநடை”, “மொழிபெயர்ப்பு”, “சொல்லியல்” முதலாய கட்டுரைகள் அருமை என்பேன். “தனக்கென்று தனியே பொருள் உடையதாய் விகுதிகளையும் சொல்லுருபுகளையும் ஒட்டுகளையும் ஏற்க வல்லதாய் மொழியில் தன்னிச்சையாக இயங்குகின்ற ஒன்று எதுவோ அதனைச் சொல் என்று கொள்ளலாம்”  என்னேயொரு துலக்கமான வரையரை !
“பெயர்த்திரிபு வடிவங்களையும் (casal forms) வினைத்திரிபு வடிவங்களையும் (conjucated forms) அகராதி தனித்தனியே குறிப்பிடுவதில்லை. தமிழ்-தெலுங்கு , தமிழ்-மலையாளம், தமிழ்-கன்னடம் போன்ற இருமொழி அகராதிகள் இல்லை”. இவை நம் நெடுநாள் ஏக்கத்தை வெளிப்படுத்தும் கருத்துகளன்றோ? இத்தகு மொழிசார் சிந்தனைகள் மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் வளர்ச்சி நிறுவன நிர்வாகிகள் போன்றோரிடை செழித்து வளரவேண்டும்.

Tuesday, 24 February 2015

ஒரு பொருட்கிளவி


‘உலகம்’ என்னும் பொருளில் வரும் தமிழ்ச் சொற்கள் எத்தனை எத்தனை ?

இதோ அகர வரிசையில் !

இவை தவிர்த்து வேறு சொற்கள் தெரியுமாயின், கூறுங்கள் நண்பர்காள் !

1.   அகிலம்
2.   அவனி
3.   உலகம்
4.   உலகு
5.   கிடக்கை
6.   குவலயம்
7.   ஞாலம்
8.   தரணி
9.   நானிலம்
10.  பார்
11.  புவனம்
12.  புவனி
13.  புவி
14.  பூமண்டலம்
15.  பூமி
16.  பூலோகம்
17.  பூவலயம்
18.  பூவுலகு
19.  பூழில்
20.  மகி
21.  மகிதலம்
22.  மகீ
23.  மகீதலம்
24.  மண்
25.  மண்டலம்
26.  மண்ணுலகு
27.  மாநிலம்
28.  மேதினி
29.  வையகம்
30.  வையம்  

உலகத் தாய்மொழி தினம் !



             
                     தமிழ் என்றும் உயிர்மொழி


தாயினின் சிறந்ததொரு தெய்வமுமில்லை
தாய்மொழியின் மிக்கதொரு மொழியுமில்லை
தமிழின் இனியமொழி தரணியிலில்லை
சங்கம் வளர்த்த சந்தத்தமிழாம்
பங்கம் ஒன்றிலா பாந்தமொழியாம்
தம்மொழியாயின் இறப்பிலும்கூட இனிதென்பர்
தன்னேரிலாச் செம்மொழித் தமிழோ
தமிழர்க்கென்றும் உயிர் மொழியாம்

பண்டைப் பெருமை பயனிலை இன்று
பாரினில் பன்மொழி ஆளுமை கண்டோம்
முந்தை வைப்போம் முதுமொழியை
முனைந்துவளர்ப்போம் வினைமொழியாய்
அறிவியலாயினும் ஆன்மிகமாயினும்
வணிகமாயினும் வாழ்வியலாயினும்
கணினியாயினும் கணிதமாயினும்
கலைகளாயினும் கருவிகளாயினும்

இணையமாயினும் இயற்கையாயினும்
இளையோர்க்காயினும் முதியோர்க்காயினும்
எதுவும் இயலும் எம்தமிழில்
என்னும் காலமும் வந்திடுமே 
உலகுவாழ்த் தமிழ ரெல்லாம்
உவந்து வளர்ப்பர் வளர்தமிழை
தமிழில் உலக நடப்பறிவோம்
தகவல் யாவும் பகிர்ந்திடுவோம்

பேச்சிலும் எழுத்திலும் தமிழேயாம்
பிழைகள் தவிர்த்த தனித்தரமாம்
புதுப்புது தமிழ்ச்சொல் புனைந்திடுவோம்
பொலிவுடன் தமிழை மெருகிடுவோம்
பலப்பல மொழிவழி இலக்கியங்கள்
படித்திட வகையாய்ப் பெயர்த்திடுவோம்
எம்மொழி கற்றுத் தேறிடினும்
நம்மொழி நமக்குத் தாயன்றோ

வாழும்போதும் வண் தமிழாம்
வானகமேகினும் தண் தமிழாம்
வாழிய தமிழ்மொழி வாழியவே
வாழிய என்றும் உயிர்மொழியாய் !
                      
(உலகத் தாய்மொழி தினம் – பிப்ரவரி 21)
                              



Thursday, 26 June 2014

     அலைந்து  திரிந்து  அறிந்தேன்  அவனை !


ஆலயம் பல சென்று பதிகங்கள் பாடி வந்தேன்    
மசூதித் தளமதில் தலைதவழத் தொழுது வந்தேன்    
மாதாகோயில் சென்று  மணியடித்துச் செபித்து வந்தேன்  
பொற்கோவில் புகுந்து புனிதநூல் படித்து வந்தேன்    
புத்தவிகாரம் நுழைந்து  புனிதனைத் தொழுது வந்தேன்   
மகாவீரர்  முன்னின்று மனமுருக வேண்டி வந்தேன்          
பூசைஅறையில் பூக்கொண்டு நாளும் பூசித்து வந்தேன்    
                                                              அனைத்தும் புரிந்தும் அடிமனம் ஆறுதல் கொள்கிலையே   
என்செய்வேன் இனியொரு இடம்தான் செல்வதற்கிலையே
                                                                     சகத்தின் நாயகம் சகலருக்கும் என்னும்
 சமயம் கடந்ததொரு ஆன்மிகம் உண்டோ ?      
 உள்மனக் குரலொன்று  உரைத்தது ஆங்கே  -                                  ‘ஆசுநீங்கிய அகமெனின், உள்ளே உறைவான் உத்தமன் ’  
                                                                             ஆணவம் களைந்து, அகத்தை விரித்து, அறம்  தேக்கினேன்
 அகமும் புறமும் அவனிருக்கக் கண்டேனே !                                       

Sunday, 2 June 2013

குறள் கிளறும் சிந்தனைகள்

திருக்குறள் தமிழில் முப்பால் நெறிகூறும் மூலநூல். முன்னாள் பதின்மர் தவிர்த்து, திருக்குறள் அச்சேறிய  (1812) இந்த நூறாண்டு காலத்தில் பல அறிஞர்களும், நூலோரும் விரிவான உரைவிளக்கங்கள் தந்திருப்பதோடு,  உலகின் பலமொழிகளில் மொழிவல்லுநர்களால் பெயர்க்கப்பட்டுள்ள பெருமையுடைத்து.  அண்மையில் நரிக்குறவர் மொழியில் (வக்ரபோலி) பெயர்க்கப்பட்டதையும் கணக்கில் கொள்வோமாயின், இதுவரை 27 மொழிகளில்  திருக்குறள் பயில வகைசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் திருக்குறளை மொழிபெயர்த்து உரை எழுதியுள்ளனர். எண்ணற்ற கட்டுரைகளும், ஆய்வுரைகளும், பொழிவுகளும் திருக்குறள் இன்றளவும் கண்டுவருகிறது என்பது தமிழுக்கே பெருமை சேர்ப்பதாகும்.  
இவ்வாறிருக்க, கடவுள் நம்பிக்கை போன்ற சில குறள்நெறிகள் மறுக்கப்படுவதோடு, திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" எனும் அதிகாரமே இடைச்செருகல் என்று வாதிடுவாரும் உளர். சமயம், மற்றும் கடவுள் சார்ந்த ஆன்மிகக் கருத்துகள் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களிடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் நிலவிவருவதாம். அவற்றை மறுப்பாரும், எதிர்ப்பாரும் அற்றை நாளிலிருந்தே உண்டு என்பதும் வரலாறு. ஆயினும், வள்ளுவர் வாய்மொழிக்குத்  தவறாகப் பொருளுரைக்கும் / பொருள்கொள்ளும்  தீமைக்கு ஆளாகலாகாது என்பதும் இற்றை நாளில் நாம் உணரவேண்டிய ஒன்றாம்.
 இக்கால உரையாசிரியர்களில் சிலர் முற்றிலும் புதுமையான முறையில் விளக்கங்கள் தருவதோடு, ஆய்வாளர்கள்கூட திருக்குறளைப் புதுமைப் பார்வைகொண்டு கருத்துருக்களைத் தர முற்பட்டுள்ளனர். மிகச்சில குறள்நெறிகள் இக்கால விழுமியங்களுக்கு முரண்பாடாய்த் தோன்றுவதாக வாதிடுவோரும் உண்டு. அவர்களது கூற்றையும் கூர்ந்து கேட்டு விளக்கமளிப்பது இன்றையத் தேவையெனலாம்.
திருக்குறள் வாழ்வியல் நெறிகளை எளிமையும், இனிமையும் நிறைந்த மொழியில், படிப்போர் உள்ளத்தே பசுமரத்தாணிபோல் பதியும் வண்ணம் மிகக் குறுகிய வடிவிலமைந்த குறள் வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.    நூல்களிலும்,

பொழிவுகளிலும் குறட்கருத்துகள் சரளமாக மேற்கோள் காட்டப்படுவதையும் காணலாம். ஆயினும், இலக்கிய வட்டத்திற்கும் அப்பால்,  இன்று பல்லூடகத் தாக்கங்களுக்குப்   பெரிதும் உள்ளாகியிருக்கும் சாதாரண மக்கள் மற்றும் பாமர மக்களிடையும் பெருவாரியாகச் சென்றடைய வேண்டியது இக்காலக் கட்டாயம் எனலாம்.
இவ்வகையில் அமையுமாறு மூன்று கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்போர், கால ஓட்டத்தில் நாளும் மாறிவரும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும்கூட திருக்குறள் எவ்வாறெல்லாம் பொருந்தி வரலாம் அல்லது சிற்சில இடங்களில் மாற்றத்திற்குள்ளாகலாம் என்பதை நடுவுநிலைமையோடு ஆழ்ந்து சிந்தித்துப் பயனுற வேண்டுமென்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த குறிக்கோள். இதைத் தவிர்த்து, திருக்குறளுக்குப் புதிதாய்ப் பெருமை சேர்க்க வேண்டியதொன்றில்லை.

இம்மூன்று கட்டுரைகளையும்  எனது இணைய தளத்தில் பார்க்கவும்(sabavadivelu.com)

  வள்ளுவம் தெளிவோம்  !  வாழ்வில் உயர்வோம்  !!

                                           
                                                                                சபா வடிவேலு