எனது மின்னூல்கள்

Sunday 20 September 2015

மறதி எனும் மா பிணி

மறதி எனும் மா பிணி                                                                                                         
உன்னதமாம் மாந்தர் மூளை                            உலகினில் ஒப்பிலை வேறே
பிறப்புதொட்டு இறப்பு வரை
பிறழாது நிலைக்குமோ நினைவுகள் ?

கண்டதும் கற்றதும் கேட்டதும் எண்ணியவும்
கணக்காய் நினைவில் நிற்பதும் உண்டாமோ?
மறக்க விழைவது மண்டிக் கிடக்குமே
இருக்க விழைவது இல்லாது ஒழியுமே

பக்கம் பக்கமாய்ப் படித்தது என்னே?
பலகாலும் நினைவில் படிந்தது என்னே?
சொடுக்கில் சொற்கள் அடுக்கியது என்னே?
சொல்லாது இப்போது மறைவது என்னே?

மறதி மனிதர்க்கு நன்றா என்ன?
மக்கும் நினைவுகள் பலவா என்ன?
மதியும்மறதிநோய்உறுமா என்ன?
முதியோர் அவதி ஒன்றா என்ன?

பழகிய பெயரும் பதுங்கி நிற்க
பழக்க வழக்கம் தடுமாறித் திகைக்க
செய்வது செம்மையாய் செய்யாது தவிக்க
முதியோர் மறதி பிணியெனக் கண்டோம்

இடையறா மனப் பயிற்சியாம் என்றும்
இறுக்கமுறா மனநலமாம் இரவுதொறும்
இயல்பாய் உறக்கமாம் இதமாய் ஊணாம்
இனியன இவையெலாம் நாடொறும் கொள்ள

கள்ளும் புகையும் இன்னாதெனக் களைந்து
உள்ளும் புறமும் வெகுளி துறந்து
உற்றார் உறுதுணை தமக்கென உவந்து
முதியோர் முயலமறதிநோய்போமே !

முற்றும் இயல்பே முதியோர் ஞாபகமறதி
சற்றும் தகாதே இளையோர்க்கு இந்நோய்
கவனச் சிதறல் கருத்துக் குலைவாமே
மனப் பயிற்சி மறதியைப் போக்கிடுமே !

கல்விப் பயிற்சி கடைவரை கைகொடுக்கும்
கவனப் பயிற்சி நினைவுகளை ஏந்தும்
நினைவுக் கலை பயில்வீர் நித்தமும்
நனவுலகை வெல்வீர் நவபாரதத்தீரே !                                      ---- சபா . வடிவேலு                                                                  (உலக ஞாபகமறதி நோய் தினம்செப். 21
(World Alzheimer’s Day)

Saturday 5 September 2015

MY BOOK

                  

                 வீழ்க சாதி சமயம்!  வெல்க மனித நேயம்!  
                                                 (எனது    கவிதைநூல் )   
       
       எண்ணங்களின் இசைப்பே கவிதைகளாம். சிந்தனைக் கருவை வளர்த்தெடுத்து,  எழிலுருவம் பெற்றிடத் துணைநிற்பவையே கவி தொடுக்கும் சொற்களாம்.  சக்தி தரும் உணவிற்குச் சுவையூட்டுதல் போன்றதே கவிதை வடிவம் . இலக்கணம் கடந்து, இன்னோசை  தேர்ந்து, எளிமையுடன் வடிக்கப் பெறுவதே மரபுசாராக் கவிதையெனலாம்வரிகளை ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிதைகேட்பவர் விழைந்து கேட்கும்வண்ணம்   பழகு தமிழில் பாங்குறச் சொல்லும் திறனே புதுக்கவிதை. யாப்புச் சுதந்திரம் கவிதையை எண்ணற்றவர்களிடம் எடுத்துச்செல்ல உதவுகிறது. பண்டிதர்களுக்கும் அப்பால் கவிதாரசனை  இருப்பது கணக்கில் கொள்ளப்படுகிறது.
  கருத்துவானில் கடிவாளமின்றி கற்பனைத்தேரில் சொல்லேருழவர்கள் பவனி வருவர். எத்துணை எத்துணைக் கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் கைபேசித் தளங்களிலும் இணையங்களிலும் மின்னூல்களிலும் மின்னூலகங்களிலும் எனப் பல்லூடகங்களிலும் உலகளாவிய தமிழ் வாசிப்புகள் பரந்து பட்டுள்ளன ! புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சொல்லோவியங்களாய், கலைச் சிற்பங்களாய் நாளும் உயிர்க்கின்றன! வளர் தமிழின் புதுப்புதுப் பரிமாணங்கள் வைகலும் வளர்த்தெடுக்கப் படுகின்றனவே !
           இச்சூழல் தந்த துணிவின் விளைவே நானும் கவிதை எழுதத் தொடங்கியது. பலபொழுதில் பல்வகைச் சூழலில் கருக்கொண்ட கருத்துகளைக் கவிதையாக்கிப் பார்த்தேன்நம்மைச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், மென்மையான மனித உணர்வுகளின் ஆளுமை, உறவுகளின் மென்மையும் வன்மையும், வாழ்வின் வசந்தமான இளமையும், கோடையாகிய முதுமையில் தனிமையும், பழைமையும், புதுமையும்,  ஒளிரும் பன்முக மனித ஆற்றல் எனப் பல்சுவை கொண்ட பாடல்களைத்தான் வார்த்துள்ளேன்.        
 புறநிகழ்வுகளைக் காண்பதையும் கேட்பதையும் உள்ளுவதையும் உணர்வுகளாய் வடித்துள்ளேன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வீச்சும் தாக்கமும் எளிய தமிழில் கதம்பக் கவிதைகளாய்ப் பதிவுபெற்றுள்ளன. 
  கவிதைகளை வாசியுங்கள்; என்போன்ற எளியோர்க்கும் வசமாகும் வண்டமிழை வாழ்த்துங்கள்                          

                        
                    இன்று வெளிவந்துள்ள எனது கவிதைநூல். மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இச்சிறுநூல்  47 எளிய கவிதைகளை உள்ளடக்கியது. விலை ரூ.60

 முகவரி: 
மணிமேகலைப் பிரசுரம் 
7 தணிகாசலம் சாலை, 
தி.நகர், சென்னை 17 
தொலைபேசி: 044-24342926.  
                நண்பர்கள் இந்நூலினை வாங்கி , கவிதைகளைச் சுவைத்து, கருத்தினை வெளியிடுமாறு நட்புடன் வேண்டுகிறேன்.